பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று புதன்கிழமை 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நடைபெறுகிறது. நாட்டில் ஏற்பட்ட மழை வெள் ளம், மண்சரிவு மற்றும் இதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் தொடர்பாகவே இன்றைய விசேட பாராளுமன்ற அமர்வு இடம்பெறுகிறது.
கடந்த வாரம் பாராளுமன்ற அமர்வின் இறுதி தினமான 20 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட எம்.பியும் மஹிந்த அணி ஆதரவாளருமான தினேஷ் குணவர்த்தன நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை தொடர்பாக விசேட ஒரு நாள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி அறிவிப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அதற்கமைய இன்று புதன்கிழமை வெள்ள அனர்த்தம் மண்சரிவு தொடர்பாக விசேட ஒரு நாள் பாராளுமன்ற விவாதம் இடம்பெறுகிறது.
இதன்போது நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கைகள் அவர்களுக்கான நிவாரணங்கள், நிதிச் செலவுகள் உட்பட பல கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்.
அதற்காகவே இன்றைய விசேட விவாதம் என வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்தார்.
அதேவேளை, நாட்டில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.