இரத்தினபுரி மாவட்ட தோட்டப்பகுதிகளில் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தோட்டத் தொழிலாளர்கள் எயிட்ஸ் நோய் குறித்து விழிப்புணர்வுகளைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகுமென இரத்தினபுரி பொது வைத்தியசாலையின் பாலியல் மற்றும் எயிட்ஸ் நோய் தடுப்பு பிரிவின் தலைவர் வைத்திய கலாநிதி காஞ்சன உபசேன கூறினார்.
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இதனைத் தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து பெரும் எண்ணிக்கையானவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். குறிப்பாக பணிப்பெண்களாக வியாபார நோக்கத்துக்கு மத்திய கிழக்கு மற்றும் மடகஸ்கார் போன்ற நாடுகளுக்குச் செல்கின்றனர். அத்துடன் வெளிநாடு சென்ற பின் அவர்களின் துணைவர்களிடையே நடத்தை பிறழ்வுகள் காணப்படுகின்றன. இதனால், இரத்தினபுரியில் எயிட்ஸ் நோய் பரவும் அபாயம் காணப்படுகின்றது.
தோட்டப் பகுதி பெண்களும் கூடுதலாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்வதனால் அப்பகுதியில் எயிட்ஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், இம்மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் விபரங்களை முறையாக கூற முடியாதுள்ளது. இதனால், இரத்தினபுரி மாவட்ட தோட்டப்பகுதிகளிலும் எயிட்ஸ் நோய் தொற்றுள்ளவர்கள் காணப்படுகின்றனர்.
இவர்கள் முறையாக சிகிச்சை நிலையங்களுக்கு வருவதில்லை. எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த தற்போது மருந்துகள் காணப்படுகின்றன. நோய் தொற்றியவர்கள் முறையாக சிகிச்சை பெற்றுக் கொண்டால் அவர்களும் சாதாரண மனிதர்கள் போல் வாழலாம்.
இரத்தினபுரி மாவட்ட தோட்டங்களில் எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்த முற்படும்போது தொழிலாளர்கள் பின்வாங்குகின்றனர். இதனால், எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியாதுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்கள் காணப்படுவதாக கூறப்பட்டபோதும் சுமார் 300 பேர் மட்டுமே முறையாக சிகிச்சை பெறுகின்றனர். இதனால், இம் மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளிகளின் விபரங்களை முறையாகக் கூற முடியாதுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 16 – 24 வயதிற்கிடை யிலுள்ளவர்களிடையே எயிட்ஸ் நோய் தொற்று குறிப்பாக எச்.ஐ.வி. தொற்று காணப்படுகின்றது. இதனால், பாடசாலை மட்டங்களில் எயிட்ஸ் நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று குறித்து விளக்கமளிக்கப்படுகின்றது. மேலும், பாடசாலை பாடத்திட்டங்களில் குறிப்பிட்டளவு அடிப்படை பாலியல் சம்பந்தமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அநேகமான ஆசிரியர்கள் இந்த விடயங்களை கற்பிக்க முயற்சி செய்வதில்லை. அதனைத் தவிர்த்து விடுகின்றனர். இதனால், பெரும்பாலான மாணவர்கள் பாலியல் சம்பந்தமான வினாக்களுக்கு விடையளிப்பதில்லை. இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்களின் அடிப்படை பாலியல் அறிவு குறைவாகக் காணப்படுகின்றது.
இந்த அறிவினை முறையாக பெற்றால் மாணவர்கள் தவறான வழியில் செல்வது தவிர்க்கப்படும்.
எயிட்ஸ் மற்றும் அனைத்து பாலியல் நோய்களுக்கும் சிகிச்சைகள் இலவசமாக இரத்தினபுரி வைத்தியசாலையில் வழங்கப்படுகின்றன. எனவே, எயிட்ஸ் நோய் தொற்றினால் எவ்வித அச்சமுமின்றி சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன். இந்த கொடிய எயிட்ஸ் நோய்க்கு சிகிச்சை பெறாவிட்டால் பாரிய பின்விளைவுகள் ஏற்படும்.
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து கர்ப்பிணி மார்களுக்கும் எயிட்ஸ் நோய் இருக்கின்றதா? என்பது குறித்து இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அநேகமான கர்ப்பிணிப் பெண்கள் எயிட்ஸ் நோயற்றவர்களாகவே உள்ளனர் என்றார்.