சிங்களே என்று சொல்லிக் கொண்டு இரவு நேரங்களில் நரித் தனமாக செயல்படும் சிலரால் சிங்கள இனத்துக்கே அவமானமாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று (6) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
‘சிங்களே என்ற ஓர் இனம் தெரியாத குழுவொன்று தற்பொது நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது குறித்து அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். ‘
‘சிங்களே’ என்றால் சிங்கத்தின் இரத்தம். அப்படியென்றால் இவர்களது செயற்பாடு சிங்கத்தைப் போன்று உறுதி மிக்கதாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் எலி, நரிகளைப் போன்று இரவு நேரங்களில் கள்ளத்தனமாக செயற்படுகின்றனர். இது நாட்டுக்குள் வீண் பிரச்சினைகளையே ஏற்படுத்தும். அத்துடன் அண்மையில் இவர்கள் நுகேகொடை பகுதியில் உள்ள முஸ்லிம் வீடுகளில் ‘சிங்களே’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டி விட்டுச் சென்றுள்ளனர். முஸ்லிம்களுடன் இவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதை நேரில் சென்று பேசி முடித்துக் கொள்ள வேண்டும். மாறாக இரவு நேரங்களில் நரித்தனமாக செயல்படக் கூடாது. இவர்களின் கள்ளத்தனமான செயற்பாடானது முழு சிங்கள இனத்துக்கே அவமானமாகும்.
மேலும் அரசாங்கம் அமைக்க இருக்கும் புதிய அரசியல் அமைப்பானது பௌத்த தர்மத்தை இல்லாமல் செய்து விடும் என்ற தினேஷ் குணவர்த்தன கூற்று அடிப்படையற்றது. பௌத்த தர்மத்தை இல்லாமல் செய்ய இலங்கையர் யாரும் இடமளிப்பார்களா? இல்லை.
எனவே சகல இன மக்களும் தற்பொழுது ஒற்றுமையாக இருக்கும். இந்த நாட்டில் மீண்டும் இன,மத வாதத்தை தூண்டி பழைய நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல இடமளிக்க முடியாது. இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.