ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராக இருக்கின்றது என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது சகோதரரும் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து இராணுவச் சதிப்புரட்சியொன்றுக்கு முயற்சித்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று தேசிய அரசாங்கத்தின் முக்கியஸ்தரான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், அமைச்சரவை பதவியேற்றதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று மங்கள சமரவீர கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதை தடுக்குமாறு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும், அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டுள்ளனர். நீதியான சுதந்திரமான தேர்தலொன்றை உறுதிசெய்யதமைக்காக நாடு அவர்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்ட பின்னர் சதிப்புரட்சி முயற்சிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகும். மக்களுக்கு உண்மைகள் தெரிவிக்கப்படும். மக்களின் ஆணைக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ செயற்பட முயன்றார் என்பது மக்களுக்குத் தெரியவேண்டும். வாக்களிப்பு தினத்தன்று நாடு அமைதியாக காணப்பட்டாலும், திரைமறைவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்பபடுத்தவேண்டும்.
தோல்வியை ஏற்றுக்கொள்ளதா ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர். இவ்வாறான பதற்றத்தை ஏற்படுத்த எந்த குழுவிற்கும் புதிய தேசிய அரசாங்கம் இடமளிக்காது.” என்றுள்ளார்.