– ஏ.எச்.எம்.பூமுதீன் –
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
புத்தளம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய 03 மாவட்டங்களிலேயே ஐ.தே.கவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி புத்தளம் மாவட்டத்தில் ஐதேக பட்டியலில் அ.இ.ம.கா சார்பில் முன்னாள் மாகாண அமைச்சர் நவவியும் குருநாகல் மாவட்டத்தில் டொக்டர் சாபியும், அநுராதபுர மாவட்டத்தில் இசாக் ஹாஜியாரும் போட்டியிடவுள்ளனர்.
இதே வேளை வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தனித்தா அல்லது ஐதேகவுடன் இணைந்தா போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.
இன்று மாலை (11) இடம்பெறவுள்ள அ.இ.ம.கா வின் அதியுயர் பீடக் கூட்டத்திலேயே இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இது இவ்வாறிருக்க வன்னி மாவட்டத்தில் ஐதேகவுடன் இணைந்து போட்டியிட அ.இ.ம.காவின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் கையொப்பமிட்டார் என வெளியாகியுள்ள செய்தியை அமைச்சர் முற்றாக மறுத்துள்ளார்.
அது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன்
‘ நான் இதுவரை ஐதேக பட்டியலில் போட்டியிடுவது தொடர்பில் கையொப்பமிடவில்லை. நாளை மாலை இடம்பெறும் அதியுயர் பீட கூட்டத்தின் போதே அது தொடர்பிலும் முடிவெடுக்கப்படவுள்ளது. நேற்று (10) நான் கையொப்பமிட்டதாக வெளியான தகவல்கள் வெறும் வதந்தி’ என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினர்.