– வாழைச்சேனை நிருபர் –
இலக்கு இல்லாதவர்களின் பயணம் வெற்றி அளிக்காது, இந்தப் பயிற்சியினை பெறும் மாணவர்கள் உயர்ந்த இலக்கினைக்கொண்டு செயற்படுவது மகிழ்ச்சியான விடயமாகும்.என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ் அமீர் அலி தெரிவித்தார். நேற்று (10) மாலை மீராவோடை சைபுல்லாஹ் தற்காப்புக் கலைக் கழகத்தின் காரியாலய திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
இந்தப்பிரதேசத்தின் ஆண் மாணவர்கள், இளைஞர்கள் திட்டமிட்டு போதைவஸ்துப்பாவனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள், இந்த விடயத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் அவதானத்தை செலுத்த வேண்டும். கல்வி விடயத்திலும் ஆண்களை விடவும் பெண் மாணவர்களே அதிகம் உயர்ந்த பெறுபேற்றினைப் பெருகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் கல்வித்தகைமையுள்ள இளைஞர்களுக்கான தட்டுப்பாடு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்றைய இளைஞர்கள் வீணான களியாட்டங்களில் ஈடுபட்டு காலங்கடத்துவதை பரவலாக அவதானிக்க முடிகிறது. ஆனால் நீங்கள் வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய ஒரு பயிற்சியினை பெறுகின்றீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேற உந்து சக்தியாக இருக்கும். எனக்கூறினார் இதன் போது பிரதி அமைச்சரின் தனிப்பட்ட நிதியிலிருந்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்களை பிரதி அமைச்சர் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் முன்னாள் பிரதேச சபை தவிசாளர் ஜனாப் ஹமீட், கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். பீர்முஹம்மட் , முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான அல்பத்தாஹ் மற்றும் ஜனாப் அஸ்மி கழகத்தின் தலைவர் ஜனாப் அஜ்மீர், கழகத்தின் செயலாளர் ஜனாப் சமீன், மற்றும் பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.