Breaking
Fri. Nov 15th, 2024

சர்வதேச இடம்பெயர்ந்த தினத்தில், இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புதிய நம்பிக்கையினை இட்டுச் செல்லும் செயற்பாடுகளின்பால் எமது பார்வை செலுத்தப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய நாள் என்பது இடப்பெயர்வுகளை சந்தித்த ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மறக்க முடியாத தினமாக பதியப்பட்டுவிட்டது என்பது யதார்த்தமாகும். பழையதை மறக்காமல் நிகழ்காலத்தில் நின்றுகொண்டு, எதிர்காலத்தினை அடைவாகக்கொண்டு செயற்படும் இலக்கு நோக்கிய பயணத்திற்கு மிகவும் முக்கியமானதாக, இன்றைய “சர்வதேச இடப்பெயர்வுக்குள்ளான மக்களின் தினம்” அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்த தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“இன்று சர்வதேசத்தின் பல நாடுகளில் வாழும் சிறுபான்மை சமூகங்கள், இதனை அனுபவித்துவருகின்றதை கண்கூடாகக் காணமுடிகின்றது. குறிப்பாக, நாம் வாழும் எமது இலங்கை தேசத்தினை எடுத்துநோக்கும் பட்சத்தில், கடந்துவந்த 30 வருடகால யுத்தமே அதிகமான அழிவுகளையும், இடப்பெயர்வுகளையும் எற்படுத்திய பதிவினைக் கொண்டுள்ளது.

வடபுலத்தில் சிறுபான்மை சமூகமாக வாழ்ந்த முஸ்லிம்கள், தமது உடமைகளையும், உயிர்களையும் இழந்து, இடப்பெயர்வுக்குள்ளாகிய வரலாறு இன்று அழியாத பதிவாகவேயுள்ளது. இதனால் இம்மக்கள் இழந்தவை இன்னும் மதிப்பிடமுடியாதுள்ளது.

இதை விட பன்மடங்கு மனித ஆளுமை, திறமை, சிந்தனையின் வெளிப்பாடு, ஆக்கத்திறமை என்பன ஒருபோதும் பணத்தினை வைத்து மதிப்பிட முடியாது என்பதை யாவரும் உணர்ந்திருப்பர். இப்படிப்பட்ட விலைமதிக்க முடியாத இறைவனினால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சொத்துக்கள், வளங்கள் அன்றைய 1990 களில் சிதறடிக்கப்பட்டு, மக்கள் வெளியேற்றப்பட்டனர். அதன் பிற்பாடு எதிர்கொண்ட சிரமங்களும், துன்பங்களும் கறுப்பு பக்கத்தின் ஒரு முகமாக, இன்றும் இடப்பெயர்வுக்குள்ளான சமூகத்தினரால் பார்க்கப்படுகின்றது.

இந்த நிலையில், இன்றைய சர்வதேச இடம்பெயர்ந்த தினம் நினைவுகூறப்படுகின்றது. இந்த தினமானது வெறும் நினைவுகூறல்களாக மட்டுமல்லாமல், இவ்வாறான துன்பியல் வாழ்வினை சந்தித்த சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கான புதிய பாதையினை காண்பிக்கும், ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் தினமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Post