Breaking
Sun. Nov 24th, 2024

வடக்கு கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் முஸ்லிம்களின் ஒற்றுமையை பிரதேச மட்டத்தில் கூறுபோட்டு கூர்மையாக்குவதிலேயே முடியப்போகின்றது. வடக்கு கிழக்கின் மொத்த முஸ்லிம்களிடம், இன்னும் குறிப்பாகச் சொன்னால், கிழக்கு முஸ்லிம்களிடம் கட்டியெழுப்பப்பட வேண்டிய முஸ்லிம் தேசியம் என்ற உணர்வை தலையெழுப்பவிடாது மூடிமறைப்பதற்கே இந்தத் தேர்தல்கள் உதவப்போகின்றன.

இவ்வாறு நிகழுமானால், அண்மையில் அரங்கேறச் சாத்தியமான அதிகாரப் பரவலாக்கம், அதிகார அலகு போன்ற விடயங்களில் வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் அண்டிப்பிழைக்கும் அநாதைச் சமுகமாகவே தொடரவேண்டி வரும். அது பற்றிய அறிவையோ, அக்கறையையோ, ஆர்வத்தையோ போட்டியிடும் கட்சிகள் பொதுக் கொள்கையாக வைத்துக் கொள்ளாமல் விட்டது பெரும் தவறாகும்.

ஹக்கீம் காங்கிரஸ் யானை, மரம், தராசு ஆகிய மூன்று சின்னங்களில் கிழக்கில் போட்டியிடுகின்றது. குறிப்பாக ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது வாக்காளர்களை யானைச் சின்னத்திலும் தன் கட்டுப்பாட்டிலிருக்கும் இன்னொரு கட்சியான முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும் போட்டியிடவைத்துள்ளது. இதன் மூலம் தனது வாக்காளர்களையே முட்டிமோதவிட்டு அடிதடியில் இறக்கி விட்டு முஸ்லிம் சமூகத்தை வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது. இதன் மூலம் முஸ்லிம் தலைமைத்துவத்துக்கான தகுதியிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் தன்னை அப்புறப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

றிசாட் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யானை, மயில் ஆகிய சின்னங்களில் போட்டிக்கு நிற்கிறது. பரவலாக றிசாட்டின் மயிலுக்கு ஒரு அலை எங்கும் ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. முஸ்லிம் காங்கிரசிடமிருக்கும் முஸ்லிம் தலைமைத்துவம் மக்கள் காங்கிரசின் றிசாட்டிக்கு தாரை வார்க்கப்படப்போவது உறுதி செய்யப் பட்டு வருகிறது. ஹக்கீம் காங்கிரசை விட ஒரு வாக்காவது தான் அதிகமாகப் பெறப்போவதான றிசாட்டின் சூளுரை நனவாகவும் வாய்ப்பிருக்கிறது.

அக்கரைப்பற்று மாநகரசபை, அக்கரைப்பற்று பிரதேச சபைகளில் அட்டகாசமாக இறங்கியுள்ள அதாவின் தேசிய காங்கிரஸ் தேனீர்க் கோப்பைக்குள் புயலெழுப்பிப் பார்க்க நினைக்கிறது. தான் போட்டியிடும் சபைகள் இரண்டில் ஒன்றையாவது தோற்கும் சந்தர்ப்பம் அதற்கு உள்ளது.

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எந்த ஒரு சபையையும் முழுமையாக வெல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் இப்போதைக்கு இல்லாவிட்டாலும் நல்லாட்சிக்காரர் மீது பொது மக்களிடம் பொதுவான ஒரு நல்லாபிப்பிராயமே எங்கும் பரவலாக, மந்தமாகவேனும் ஏற்பட்டிருக்கிறது. நல்லாட்சி முன்னணிக்கு அக்கரைப்பற்று ஒரு நல்ல அத்திவாரமாகவும் அமைகிறது.

ஆனால் இந்தக் கட்சிக்காரர்கள் அனைவரிடமும் முஸ்லிம் தேசியத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பும் தாகமும் முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரத்தில் அமர்ந்துகொண்டு அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் ஆயுளைப் போக்குவதற்கே இவை அங்கலாய்க்கின்றன.

கண்ணெதிரே கண்ணீரும் கம்பலையுமாய் வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளும் எதிர் காலமும் அநாதரவாய் விடப்பட்டுள்ளன.

2017 ஆகஸ்ட் 30இல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றி சம்பந்தன் ஐயாவும், சுமந்திரனும் கையெழுத்திட்டு இலங்கை அரசியல் அமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கு தமது அவதானங்களை அனுப்பி வைத்துள்ளனர். அவற்றில் 3வது விடயமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாணமாக,  மாநிலமாக அமைய வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதன் மூலம் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் தனித்துவத்தையும், பிரத்தியேக அரசியல் அடையாளத்தையும் தமிழர்கள் நிராகரித்துள்ளனர். வடகிழக்கு முஸ்லிம்களை தமிழ்பேசும் மக்கள் என்ற சொற்றொடருள் அடக்கிஒடுக்கி முஸ்லிம்களின் தனித்துவத்தை அபிலாஷைகளை அங்கீகரிக்க மறுத்துள்ளனர்.

வரலாற்று ரீதியாக வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்பேசும் மக்கள் குடியிருப்பதாக கூறும் சம்பந்தன் ஐயாவும் சுமந்திரனும் 1990 ஒக்டோபர் இறுதியில் வடக்கில் வாழ்ந்த அத்தனை தமிழ்பேசும் முஸ்லிம் மக்களையும் ஆயுத முனையில் இரண்டு நாள் அவகாசத்தில் துப்பாக்கி முழக்கத்தில் விரட்டியடித்தபோது அதனை எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இன்றுவரையும் தான். தமிழ் பேசும் மக்கள் என்பதை தோதுக்கு பாவித்து பழகிப்போன தமிழ்த் தேசியம் தான் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தாம் ஒரு தனித்த தேசியமாக – முஸ்லிம் தேசியமாக உருவாக்கப்படுவதற்கு வழிகளை சமைத்தவர்கள். என்பது வரலாற்று உண்மையல்லவா? தாம் விரட்டியடித்த முஸ்லிம்களை வடக்கில் மீள் குடியேற்றம் செய்யும் எந்த நடவடிக்கைகளையும் எந்தத் தமிழரும் இற்றைவரை மேற்கொள்ளாமல் இழுத்தடிப்பது ஏன்? முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்பதனால் தானே?

முழு வடக்கு கிழக்கையும் இணைத்து எவ்வாறாயினும் ஒரு மாகாண சபையைப் பெற்று இரண்டாம் முறையாகவும் வடக்கிலிருந்து மட்டுமல்லாது கிழக்கு முஸ்லிம்களையும் சேர்த்து இனச்சுத்திகரிப்பு என்ற பெயரில் அடித்துத் துரத்துவதற்காகவா? சம்பந்தனும் சுமந்திரனும் முஸ்லிம்களை வலிந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாக தமிழ்பேசும் மக்கள் என்ற ஒரு சொற்றொடருள் அடக்கி வருகின்றனர். இவ்வாறு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்துக் கோருவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பில்லை என்று ஒன்றுக்குப் பத்துத்தரம் ரஊப் ஹக்கீம் கூட்டங்ளிலும், பத்திரிகைகளிலும் கூறி வருகிறார். அதுதான் முஸ்லிம் காங்கிரசின் முஸ்லிம்கள் தொடர்பான நிலைப்பாடாக இருக்கிறதா?

வடகிழக்கு முஸ்லிம்களின் உணர்வுகளை அறிந்து கொள்ளமுடியாத ரஊப் ஹக்கீம், வடகிழக்கு பயங்கரவாதப் பிரச்சினையின்போது வடக்கு கிழக்கில் எங்கேனுமாவது ஒரு இரவேனும் கழித்துப் பார்த்திராத ரஊப் ஹக்கீம், வடக்கு கிழக்கு முஸ்லிம் தேசியத்தின் ஒரு அடிமட்ட அங்கத்தவராகக்கூட இல்லாத ரஊப் ஹக்கீம், வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தின் அபிலாஷைகள் தொடர்புபட்ட விடயங்களில் அசட்டுத்தனமான அபிப்பிராயங்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களும் இந்த விடயத்தில் முழுத்தெளிவு பெறவேண்டும்.

றிசாட்டின் மக்கள் காங்கிரஸ். டக்ளசின் ஈபீடீபீ, ஹக்கீமின் முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசனின் டீபீஏ ஆகிய நான்கு கட்சிகளும் ஒன்று சேர்ந்து அரசியல் அமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கு அனுப்பி வைத்த கூட்டு முன்மொழிவில் (ஆ/02 இல் பிராந்திய அட்டவணை 1 இற்கு அமைய) இலங்கை ஒன்பது மாகாணங்களைக் கொண்டிருக்கும் என்று கையெழுத்திட்டு அனுப்பி வைத்துவிட்டு வெளியில் வந்து வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பு இல்லை என்று  ஹக்கீம் கூறுவது யாரை ஏமாற்றுவதற்காக? முஸ்லிம் காங்கிரசையா? அல்லது மொத்த முஸ்லிம்களையுமா? வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிர்ப்பு இல்லாவிட்டால் இலங்கை ஒன்பது மாகாணங்களைக் கொண்டிருக்கும் என்பதை வழிப்படுத்தும் குழுவுக்கு ஹக்கீம் எப்படி சிபார்சு செய்ய முடியும்? முன்னுக்குப்பின் முரணானது என்று சொல்லி இந்த விடயத்தை இத்தோடு நிறுத்திவிடமுடியாது. சுத்த நயவஞ்சகத்தனம் என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும்.

 

கிழக்கைப் பிரிக்க வேண்டுமென மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் பா.உ. பிரசாரக் கூட்டங்களில் குமுறியபோது கிழக்கில் முஸ்லிம்களுக்கு தனி முஸ்லிம் அலகு என்று நாக்கூசாமல் ஹக்கீமுக்கு கூற முடியுமென்றால் வழிப்படுத்தும் குழுவுக்கு ஏன் அந்த 09 மாகாண யோசனைக்கு ஆதரவளித்து கையொப்பமிட வேண்டும்? கிழக்கு தனியாக இருப்பதுவும், கிழக்கில் தனி முஸ்லிம் அலகு அமைப்பதுவும் எப்படி சாத்தியமாகும் என்று ஹக்கீம் சொல்வாரா? இது என்ன குறளி வித்தையா?

ஹக்கீம் யாருக்கும் விசுவாசமில்லை. அரசாங்கத்திற்கும், அரசியல் அமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கும், தமிழ் சமுகத்திற்கும், ஏன் மொத்த முஸ்லிம் சமுகத்திற்கும்கூட ஹக்கீம் விசுவாசமில்லை. அவர் அவருக்கு மட்டுமே விசுவாசி.

ஊண் உறக்கமின்றி, வியர்வை வடித்து, இரத்தம் சிந்தி, உயிர்களை இழந்து, தானைத் தலைவரையும் பலிகொடுத்து கண்ணுக்குள் கட்டி வளர்த்தெடுத்த முஸ்லிம் காங்கிரசின் இன்றைய தலைவர் ரஊப் ஹக்கீம் வடகிழக்கு முஸ்லிம்களை தமிழர்களிடம் காட்டிக் கொடுப்பதற்கு பத்தாம் பசலிகளையும் பல்லாக்குத் தூக்கிகளையும் தம் படையாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

தனி முஸ்லிம் அலகு என்று நாக்கூசாமல் ஹக்கீமுக்கு கூற முடியுமென்றால், வழிப்படுத்தும் குழுவுக்கு ஏன் அந்த 09 மாகாண யோசனைக்கு ஆதரவளித்து அவர் கையொப்பமிடவேண்டும்? அரசியல் அதிகாரப் பிரச்சினைக்கு முஸ்லிம் சமுகம் இத்தகைய ஒருவரை தலைமைப் பதவியில் எப்படி தொடர்ந்து வைத்திருக்க முடியும்? எப்படி இந்தத் தலைவரின் வழிகாட்டிலிலுள்ள முஸ்லிம் காங்கிரசுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க முடியும்? முஸ்லிம்கள் சிந்திக்கவே மாட்டார்களா?

இவரைவிட றிசாட் காங்கிரஸ் எவ்வளவோ தேவலை. முன்னர் கூறியுள்ள நான்கு கட்சிகள் அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவுக்கு அனுப்பி வைத்த கூட்டு முன்மொழிவுகளில் [ஆ / 02 இல்  பிராந்திய அட்டவணை 1 இற்கு அமைய]  லங்கை ஒன்பது மாகாணங்களைக் கொண்டிருக்கும் என்று ஹக்கீமைப் போல் றிசாட்டும் கையெழுத்திட்டார். கடைசி நேரத்தில் ஹக்கீம் கழுத்தறுக்கக்கூடும் என்பதற்காய் அது போதாது என்று மக்கள் காங்கிரசின் சார்பாக றிசாட் தனிப்பட்ட முறையில் அரசியலமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினரின் இடைக்கால வரைபு அறிக்கை மீதான தனது கட்சி அவதானங்களை பிரத்தியேகமாகவும் அனுப்பியுள்ளார். அதில் அவர் இரண்டு அல்லது அதிகமான மாகாண சபைகளை ஒரு மாகாண சபையாக இணைப்பதற்கான எந்த அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கும் மக்கள் காங்கிரஸ் எதிராக உள்ளது. அத்துடன் அரசியலமைப்பு வடக்கு மற்றும் கிழக்கை தனியொரு மாகாண சபையாக அங்கீகரிக்கலாகாது| என்று தெட்டத் தெளிவாய் முஸ்லிம்களுக்கான தீர்வாக அனுப்பியிருக்கிறார். [பக்கம் 96ல் இது பதிவாகி இருக்கிறது]

வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. வடக்கு வடக்குத்தான். கிழக்கு கிழக்குத்தான் என்று தெட்டத் தெளிவாக சொல்லியிருக்கிறார். அப்படி ஹக்கீமுக்கு ஏன் சொல்ல முடியவில்லை? ஹக்கீம் வடகிழக்கு முஸ்லிம் தேசியத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதனால் தானே? அதனால் அவர் இதற்குப் பின்னும் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை தலைமைப்படுத்துவது எந்த வகையில் நியாயமானதாகும்.

வடக்கில் பட்ட அடி இன்னும் வலித்துக்கொண்டிருக்கிறது. அது ஓயவும் இல்லை. ரணங்கள் காயவுமில்லை. அது மேனியில் விழுந்த அடியல்ல. நூற்றாண்டு காலமாய் முஸ்லிம்கள் தமிழர்மீது கட்டிவளர்ந்த நம்பிக்கையில் விழுந்த அடி. 1990 ஒக்டோபர் இறுதியில் இனச்சுத்திகரிப்பின் பேரில் வடக்கின் 5 மாவட்டங்களிலும் வாழ்ந்த முஸ்லிம்கள் இருநாள் கெடுவுக்குள் வெற்றுக் கையராய் துப்பாக்கி வெடில் முழக்கத்தில் விரட்டியடிக்கப்பட்ட வலி. நூற்றுக் கணக்காண கிலோ மீற்றர்களை காடுகள் ஊடாய் கால் நடையாக நடந்தவலி! வயோதிபர்கள், கர்ப்பிணிகள், பச்சிளம் பாலகர்கள் என்ற வேறுபாடுகள் இல்லை. தாகம் தீர்க்க நீர்கூட இல்லாமல் உண்பதற்கு ஒரு சொட்டு உணவும் இல்லாமல் விரட்டியடிக்கப்பட்ட வலி. தமிழர்கள் தமது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறித்திருக்கும் நரமாமிச கோரத்தாண்டவத்தின் வலி.

18வயது இளைஞனாய் இருந்த றிசாட்டும் அந்த அகதிகளில் ஒருவர். இன்னும் அந்த வலி நெஞ்சில் பற்றி எரிகிறது. இன்னும் அந்தக் கண்கள் செந்நீரை வடிக்கின்றன. யாரை நம்புவது? எப்படி நம்புவது? எதற்காக நம்புவது? முழு வடக்கில் இருந்தும் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் தமிழர் இனத்தையோ தமிழ்த் தேசியத்தையோ சார்ந்தவர்கள் அல்ல என்று பச்சை குத்தி அனுப்பப்பட்ட பின்னரும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு நாங்கள் எதிர்ப்பில்லை என்று ஹக்கீம் சொல்வதுபோல் எப்படி றிசாட்டால் சொல்ல முடியப்போகிறது.

 

வட மாகாண முஸ்லிம்களின் வாழ்வுதான் பலிகொள்ளப்பட்டு பாழடைந்து போயிற்று. கிழக்கு மாகாண முஸ்லிம்களையாவது தமிழ் இனவாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு இன்று தன் தலைமீது சுமத்தப்பட்டுள்ளது என்று றிசாட் நினைத்தால் அதில் என்ன தவறு இருக்கப்போகிறது.

 

அந்த றிசாட் வடக்கோடு கிழக்கை இணைக்க எந்த அடிப்படையில் இணங்க முடியும்? எந்த உத்தரவாத்தின் பேரில் அப்படிச் செய்ய முடியும்? எனவே றிசாட் தெட்டத் தெளிவாக வடக்கும் கிழக்கும் ஒருபோதும் இணையக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாக கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

 

அந்த இனச்சுத்திகரிப்புக்கு ஆளான முஸ்லிம்கள் தாம் ஒரு தேசியமாக உருவாக்கப்பட்டுள்ளோம் என்பதை தெரியாமலேயே தனித்த பிரத்தியேகமான முஸ்லிம் தேசியமாக உருவானார்கள். முஸ்லிம்களை முஸ்லிம் தேசியம் என்று உருவாக்கிய கைங்கரியத்தை செய்தவர்கள் தழிழர்கள் தான். அதற்காக இன்றைய நிலையில் கூட முஸ்லிம்கள் அவர்களுக்கு நன்றி சொல்லலாம். ஏனெனில் நாம் இப்போது வெறும் முஸ்லிம் குழுக்களல்ல. நாம் இப்போது முஸ்லிம் மக்கள் கூட்டமாய் உருவாகியுள்ளோம். அதனால் நாம் முஸ்லிம் தேசியம் ஆக ஆக்கப்பட்டுள்ளோம். அதன் காரணமாக சுய நிர்ணயத்திற்கு நாம் உரிமையாளர்களாக்கப் பட்டிருக்கிறோம். அந்த நம்பிக்கை வளர்க்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் இப்போது சொல்லுகிறார்கள், வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் கூறிவரும் வடக்கு கிழக்கு தமிழ்மொழி மாநிலத்தில் தமிழர்கள் கோரிவரும் அதிகார அலகுக்கு சமமான, ஈடான, தனித்த, பிரத்தியேகமான அதிகார அலகு முஸ்லிம் தேசியத்திற்கும் வழக்கப்பட வேண்டும் என்று.

 

றிசாட்டிற்கு நடிக்கத் தெரியவில்லை. பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையையும் காட்டத் தெரியவில்லை. ஒரு அகதியின் மூலமாகத்தான் வடகிழக்கு முஸ்லிம்களின் விடுதலை எழுதப்படப்போகிறது என்றால் அதற்காகத்தான் வடகிழக்கில் றிசாட்டின் அலை வீசுகிறது என்றால் அதற்காகத்தான் முஸ்லிம் சமுகத்தின் தலைமைப் பதவி றிசாட்டிற்கு கொடுக்கப்படப் போகிறது என்றால் அதனை ஹக்கீமும் அவரது அடிவருடிகளும் அப்பாவி ஆதரவாளர்களும் எதிர்ப்பது சாபக்கேடான விடயமாகும். ஹக்கீம் வேண்டுமானால் எக்கேடுகெட்டாவது போகட்டும் அதற்காக வடகிழக்கு முஸ்லிம்கள் எவரும் ஹக்கீமை பின்தொடர்ந்து முஸ்லிம் தேசியத்தின் துரோகிகளாக ஆகிவிடுவதிலிருந்தும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

 

றிசாட் குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் அமைதி பாதுகாப்பை உடனடியாக உத்தரவாதப்படுத்துவற்கான ஏற்பாடாகவே வடக்கும் கிழக்கும் பிரிய வேண்டும் என்று முழு மூச்சாய் அரசியல் அமைப்பு சபையின் வழிபடுத்தும் குழுவுக்கு 04 கட்சிகளோடும் சேர்ந்து 09 மாகாணங்களுக்கான தீர்வை முன் வைத்திருக்கிறார்.

 

வேறெந்த அரசியல் கட்சிகளையோ, அரசாங்க முகவர்களையோ திருப்திப்படுத்தும் நோக்கில் அவர் வரவில்லை. ஆனால் அவர் பின்வந்த நாட்களில் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸ் வடக்கோடு கிழக்கு இணைக்கப்படுவதற்கு எதிரானவர்கள் அல்ல என்று வெளிப்படையாகப் பேசத்தொடங்கியதும் வழிப்படுத்தும் குழுவுக்கான 04 கட்சிகளின் முன்மொழிவுகளுக்கு மேலதிகமாக தனது மக்கள் காங்கிரசின் பிரத்தியேகமான தீர்வாக வடக்கு கிழக்கு இணைப்பை பகிரங்கமாக றிசாட் நிராகரித்துள்ளார்.

 

இன்று தீர்மானிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் முஸ்லிம் தேசியத்தின் கையிலேயே விடப்பட்டுள்ளது. ஹக்கீமை பின்பற்றி வடக்கு கிழக்கு இணைப்புக்கு தாம் எதிரானவர்கள் இல்லை. என்று சொல்லி முஸ்லிம் தேசியத்தை கூட்டிக் கொடுப்பதா? அல்லது வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதா? முஸ்லிம்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

 

இலங்கை அரசியல் அமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கையில் ஜ11. அதிகாரப் பகிர்வு என்ற தலைப்பின் கீழ் இரண்டு அல்லது அதிகமான மாகாணங்கள் தனி அலகை உருவாக்கும் சாத்தியப்பாடு தொடர்பாக அரசியல் அமைப்பின் தற்போதுள்ள ஏற்பாடுகள் (உறுப்புரை 154 (அ 3)  உரிய மாகாணங்களில் மக்கள் தீர்ப்பொன்று தேவைப்படுத்தப்படும் என்ற மேலதிக தேவைகளும் யோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

 

வடக்கையும் கிழக்கையும் ஒரு மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புடன் நடாத்த வேண்டி ஏற்படின் கிழக்கு முஸ்லிம்கள் சாதாரண நிலையில் இணைப்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டுமென்றே றிசாட் வற்புறுத்துவார். அவ்வாறு நடைபெறுமானால் கிழக்கு வடக்கோடு நிரந்தரமாக இணைக்கப்படாது போய்விடும் வடக்கு முஸ்லிம்களை தமிழ்த் தேசியம் விரட்டியடித்த வீரியம் இன்று அவர்கள் அதிகார அலகைiயே கொச்சைப் படுத்துவதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். வெறும் பசப்பு வார்த்தைகளால் முஸ்லிம் காங்கிரஸ் மசிந்து கொடுத்தாலும், வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் வடக்கு கிழக்கின் இணைப்புக்கு எதிராக, பிரிவினைக்கு ஆதரவாகவே வாக்களிப்பர்.

 

இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கின் மாகாண அதிகார சபையின் முதலாவது முதலமைச்சராக ஒரு தகுதி வாய்ந்த முஸ்லிமை ஆக்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக அறிக்கை விட்டிருக்கும சம்பந்தன் ஐயா ஹக்கீமின் ஆதரவை வடக்கு கிழக்கு இணைப்புக்கு மலைபோல நம்பிக்கொண்டிருப்பதாகவே தெரிகிறது. இப்படி ஆசைகாட்டி அபகரிக்கும் எண்ணத்தை ஐயா சம்பந்தன் தொடர வேண்டாமென்று அவருக்கு அனுதாபக் கட்டளை விடுக்க வேண்டியிருக்கிறது.

 

இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்து குறைந்த பட்சம் வடக்குத் தமிழர்களோடு கிழக்குத் தமிழர்களையும் இணைத்து தமது ஆட்சியின் கீழ் கொண்டு வரவேண்டுமென்று வடமாகாணத்து தமிழ்த்தேசியம் விரும்பும் பட்சத்தில் அதை எவ்வாறு செய்யலாம் என்பது பற்றி றிசாட்டிடம் தான் பேசி முடிவெடுக்க வேண்டி வரப்போகிறது.

 

27 வருடங்களுக்கு முன் வடக்குத் தமிழர்களால் இனச்சுத்திகரிப்பின்பேரில் விரட்டியடிக்கப்பட்ட ஒரு வடமாகாண முஸ்லிம் அகதி இன்று முழு வடக்கு கிழக்கு மாகாண தமிழர்களின் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான எதிர்காலம் பற்றி இறுதி முடிவு எடுக்கும் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டிருப்பது காலத்தின் கொடையாகும்.

Related Post