– எம்.ஆர்.எம்.வஸீம் –
துருக்கியில் ஜனநாயக ஆட்சியை பாதுகாத்துக்கொள்வதற்கு துருக்கி ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அந்த நாட்டு அரசாங்கத்துக்கு முடியுமாகியது மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
துருக்கியில் இராணுவ புரட்சியொன்றின் மூலம் அரசாங்கத்தை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவம் வெள்ளிக்கிழமை இரவு அறிவித்திருந்தது. இந்நிலையில் பொது மக்கள் ஒன்று திரண்டு இராணுவத்தின் புரட்சிக்கு எதிராக செயற்பட்டு இராணுவ தாங்கிகளை மறித்தும் கற்களை வீசித்தாக்கியும் உள்ளனர். இதனால் இராணுவத்தினர் தங்கள் புரட்சியை தொடர்ந்து கொண்டுசெல்ல முடியாது சரணடைந்துள்ளனர்.
அத்துடன் துருக்கியில் இடம்பெற்ற இராணுவ புரட்சி மக்களின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி பகிரங்கமாக அறிவிப்பு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க துருக்கி ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு மகிழ்ச்சி தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
துருக்கியில் இராணுவ புரட்சியொன்றின் மூலம் ஜனநாயக நிர்வாகம் ஒன்றை அடிபணிய வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தோற்கடிக்கப்பட்டமையானது ஜனநாயகத்தை மதிக்கும் உலக மக்களின் மகிழ்ச்சிக்கு காரணமாகின்றது.
இந்த இக்கட்டான நிலையில் இலங்கையினதும் இலங்கைவாழ் மக்களினதும் ஆதரவு துருக்கி நாட்டுக்கு கிடைக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.