ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கைக்கு மேலதிகமாக 2500 ஹஜ் கோட்டா வழங்குமாறு சவூதி ஹஜ் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சவூதி ஹஜ் அமைச்சருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுதியுள்ள கடிதம் நாளை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இக்கடிதம் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையின் தூதுவர் ஊடாக சவூதி ஹஜ் அமைச்சருக்கு கையளிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைக்கு இவ்வருடம் 2240 ஹஜ் கோட்டா சவூதி அரசாங்கத்தால் வழங்கப்பட்டு 28 ஹஜ் முகவர்களினூடாக பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலைமையிலே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலதிகமாக 2500 கோட்டா வழங்குமாறு சவூதி ஹஜ் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வார இறுதியில் இலங்கைக்கான மேலதிக ஹஜ் கோட்டா தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இலங்கைக்கு மேலதிகமாக 4000 ஹஜ் கோட்டா வழங்குமாறு ஏற்கனவே சவூதி ஹஜ் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வருடம் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்யும் நேர்முகப் பரீட்சையின் பின்பு 96 ஹஜ் முகவர்கள் நியமனம் பெற்றனர். இவ்வருடம் தாம் பயணிக்கும் ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் ஹஜ் யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட்டதால் மூன்றில் ஒரு பகுதி முகவர் நிலையங்களுக்கே யாத்திரிகர்களின் பதிவு கிடைத்தது.
குறைந்தளவு யாத்திரிகர்களைப் பெற்ற முகவர் நிலையங்கள் நான்கு அல்லது ஐந்து ஒன்றிணைந்து ஒரு முகவர் நிலையத்தின் தலைமையின் கீழ் பயண ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளின் பேரில் மேலதிகமாக 2500 கோட்டா கிடைக்கப் பெற்றால் அவை முகவர்களுக்கிடையில் பகிர்ந்தளிக்கப்படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை சவூதி ஹஜ் அமைச்சரினால் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் இவ்வருடம் அதிகமானோர் ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பு ஏற்படுமெனவும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.