Breaking
Fri. Dec 27th, 2024

இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் சிவில் அணு உடன்படிக்கை உள்ளிட்ட நான்கு உடன்படிக்கைகள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சிவில் அணு தொடர்பான முதலாவது உடன்படிக்கை இன்று மதியம் கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு 04 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான  கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இந்தச் சந்திப்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்ராங்கனி வாகீஸ்வர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாக அவர் கூறினார். அணுசக்தி, மீன்பிடி, கலாசாரம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலேயே இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டமைக்கு மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் கட்டியெழுப்பி, முதலீடுகளை அதிகரித்து, இந்தியாவின் முக்கிய பங்காளராக இலங்கையை மாற்றுவதாக மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தச் சந்திப்பானது நாட்டின் பொருளாதாரம், கலாசாரம் மற்றும் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமென குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் தர்மசிறி பண்டார ஏக்கநாயக்க மேலும் குறிப்பிட்டார்.

Related Post