இலங்கை – இந்தியாவை தரை வழி மார்க்கத்தால் இணைக்கும் திட்டத்தை இரு நாடுகளும் இணைந்து செயற்படுத்த விரும்புவதாக இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்தியா மோட்டார் வாகனங்களுக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே நிதின் கட்காரி இத்தகவலை வெளியிட்டார்.
இந்தியாவின் தனுஸ்கோடிக்கும் இலங்கை எல்லைக்கும் இடையிலான 23 கிலோமீற்றர் தூரத்தை பாலம் வழியாக இணைப்பது அல்லது பாம்பன் நகரையும் தலை மன்னாரையும் (29கிலோமீற்றர்) இணைப்பது எனக் கூறிய அவர் இது இரண்டும் பொருந்தாத சமயத்தில் கடலின் கீழால் சுரங்கப்பாதை அமைத்து இணைக்கவும் திட்டமிடப்படுவதாக நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த இந்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சர், தெற்காசிய வலயங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு இந்த கடல் வழிப்பாதை மிகவும் உதவிகரமானதொன்றாக அமையும்.
மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் 23 ஆயிரம் கோடி இந்திய ரூபா – இலங்கை மதிப்பில் சுமார் 58 ஆயிரம் கோடி ரூபா செலவில் இந்தத் திட்டம் தயாராவதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இந்த போக்குவரத்து தொடர்பின் மூலம் வடமேற்கில் அமைந்துள்ள தாய்லாந்து ஊடாக மியன்மாருக்கும் இடையிலான போக்குவரத்தினை சுலபமாக்குவதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
NL