இலங்கையானது தென்கிழக்காசியப் பிராந்தியத்திலே முற்போக்குத் தன்மைகளையும் பிராந்திய பொருளாதார கேந்திர நிலையமாக விளங்குவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
நேற்று மாலை (14) கொழும்பு சின்னமன் லேக் சைட் ஹோட்டலில் தஜிகிஸ்தான் – இலங்கை வர்த்தக உயர்மட்டக் கூட்டம் இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹ்மான், தஜிகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் அஸ்லோவ் சிரோஜிடின், தஜிகிஸ்தான் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வர்த்தக அமைச்சர் ஹிக்மதுல்லோசோடா நெமதுல்லோ, இலங்கைக்கான தஜிகிஸ்தான் தூதுவர் ஜொனொனொவ் ஷெரால்லி, பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது உரையில் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை – தஜிகிஸ்தான் வர்த்தக உயர்மட்டக் கூட்டத்திற்கு வருகை தந்த தஜிகிஸ்தான் ஜனாதிபதியையும் அவரோடு இணைந்து வந்த அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.
இந்தக் குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் மகிழ்ச்சிகரமான அனைத்தையும் அனுபவிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. எங்கள் நாடு அபிவிருத்தியை நோக்கிய முன்னேற்றப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க அரசின் ஒத்துழைப்போடு இது நடைபெறுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னின்று நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகின்றனர். எங்கள் அரசு இரண்டு பிரதான கட்சிகளின் கூட்டாக அமைக்கப்பட்டுள்ளது. தேசிய அபிவிருத்தியை நோக்கியும், ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதிலும் நல்லாட்சியை நிலை நாட்டுவதிலும் தேசிய அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
அத்துடன் எங்களது ஆட்சி புதிய மாற்றங்களை கொண்டு வரும் வகையிலும் உலகளாவிய பொருளாதார போக்குக்கு ஏற்றவாரான பொருளாதாரத்தை நிறுவுவதிலும் கரிசணை செலுத்துகிறது.
நடுத்தர வருமானத்துடன் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னோக்கிச் செல்லும் எங்கள் நாடு பாரம்பரியப் புகழை நிலை நாட்டுவதற்கான மூலோபாயத்தை கொண்டு இயங்கி வருகின்றது. அத்துடன் திறந்த பொருளாதார சுதந்திர சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையையும் அது தொடர்பான உறவுகளையும் மையமாகக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்தியாவுடனும், பாகிஸ்தானுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை செய்துள்ளது. தெற்காசிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாகவும் இருக்கிறது. அத்துடன் பிராந்திய ஒத்துழைப்பை பேணும் வகையில் தென்கிழக்காசிய நாடுகளுடன் தொடர்புகளையும் உறவுகளையும் வலுப்படுத்தி சலுகைகளை அனுபவித்து வருகின்றது.
தஜிகிஸ்தானுடனான வர்த்தக ஈடுபாடுகள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலேயே இருக்கின்றது. இரு நாடுகளுக்குமிடையிலான அதிகப்படியான வர்த்தக ஈடுபாடுகள் இந்த நிலையை மேலும் விருத்தி செய்யும்.
பரஸ்பர பொருளாதார உறவுகளும் வர்த்தக நடவடிக்கைகளும் மேலும் அதிகப்படுவதன் மூலமே பரஸ்பர வர்த்தகத் தொடர்புகளை காத்திரமாக்கவும் நீண்ட காலத்திற்கு நிலைக்கச் செய்யவும் முடியும்.
இலங்கை தேயிலை உலக நாடுகளில் பிரசித்தி பெற்று விளங்குகின்றது. தஜிகிஸ்தானும் எங்கள் தேயிலையை அனுபவித்து வருகின்றது. அதே போன்று இன்னும் பல நுகர் பொருட்கள் எங்கள் நாட்டில் இருக்கின்றன. உலகப் பிரசித்திப் பெற்ற ஆடைகள், பீங்காண் பொருட்கள், இறப்பர், தெங்கு உற்பத்தி பொருட்கள், காலணிகள், மற்றும் ஆயுர்வேத உற்பத்திகள் ஆகியவற்றை தஜிகிஸ்தான் தனது சந்தையில் பாவனைக்கு விடமுடியும்.
இவ்வாறான தூதுக்குழுக்கள் இரண்டு நாடுகளுக்குமிடையிலான தொடர்ச்சியான வர்த்தக உறவுகளை முன்னேற்ற முடியும். வர்த்தகம் முதலீடு மற்றும் உல்லாசப்பயணத் துறை ஆகியவற்றில் தனியார் துறையினரை ஈடுபடுத்த இரண்டு நாடுகளும் உத்வேகம் அளிக்க வேண்டும்.
சிலோன் வர்த்தக சம்மேளனத்திற்கும் தஜிகிஸ்தான் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்திற்கும் ஏற்கனவே முன்னேற்றகரமான உறவுகள் இருந்த போதும் அதன் வழியே இன்று இடம்பெற்ற புரிந்துணர்வு உடன்படிக்கை எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.