ஐ.எஸ் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜயா ஒகசுகதார் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நான்கு இலட்சத்து எழுபத்தியோராயிரத்திற்கு மேற்பட்ட படைப்பலத்துடன் உலகின் 10வது மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளதும் உலகின் 17ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதுமான துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கான பிரத்தியேக செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
36 இலங்கையர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் சிலர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ளதாகவும் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியிருந்தார்.
ஐ.எஸ் அமைப்பைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சந்தேகங்கள் பொதுபல சேனா போன்ற கடும்போக்கு அமைப்புக்களால் கிளப்பப்படுவதுடன் முஸ்லிம்கள் தொடர்பாக தீவிர நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்ற கோஷங்கள் நாளுக்கு நாள் முன்வைக்கப்படுவதைக் காணமுடிகின்றது. இந்த நிலைமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள் என வினவியபோதே துருக்கி நாட்டுத் தூதுவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
இந்தக் கேள்விக்கு அவர் வழங்கிய முழுமையான பதில் வருமாறு:-
36 பேர் தொடர்பான விபரங்களை நான் அறிந்திருக்கவில்லை. அவர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைந்தார்களா, இல்லையா என்பது குறித்தும் எனக்குத் தெரியாது. ஆனால், சில தனிப்பட்டவர்களின் சில சட்டவிரோத நடவடிக்கைகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும்.
இந்த நாட்டின் அத்தியாவசியமான பிரிக்க முடியாத பாகமாக முஸ்லிம் சமூகம் திகழ்ந்து வருகின்றது. அவர்களது மார்க்கம் இஸ்லாமாக இருக்கின்ற போதும் இலங்கையர் என்ற உணர்வில் அவர்கள் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
மார்க்கத்தை முன்னிறுத்தியோ இனத்தை முன்னிறுத்தியோ அவர்கள் தம்மை வேறுபடுத்தவில்லை மாறாக இலங்கையின் ஒன்றிணைந்த அங்கமாகவே அவர்கள் தம்மை நோக்குகின்றனர். அது மிகவும் சிறந்த விடயமாகும். அவர்கள் ஏனைய மதத்தினருடன் இணைந்தே வாழ பல்மத பல்கலாசாரக் கொண்ட நாட்டில் விரும்புகின்றனர். அதுவே அழகானது.
இது சில தனிப்பட்டவர்களின் சில தவறான நடவடிக்கைகனை காரணமாகக் கொண்டு முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படவோ அன்றேல் அழிக்கப்படவோ கூடாது” – என்று கூறினார்.(tw)