நிதி மோசடி தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் சிலருக்கு வயிற்றோட்டம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று காலை 9 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது.
19வது திருத்தச் சட்டமூலம் நேற்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, சட்டமூலம் மீதான இரண்டாம் நாள் விவாதம் தஇன்று நடைபெறுகின்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற நிதி மோசடி மற்றும் வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் ஆகியவை தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக விசேட குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
அரசாங்கம் விடுத்திருந்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தக் குழு கொழும்பிற்கு வந்து விசாரணைகளை மேற்கொள்கின்றது.
இந்நிலையில் விசாரணைகளால் அதிர்ந்து போயுள்ள கள்ளர்கூட்டம் தற்போது ஆர்ப்பாட்டங்களையும் ஏனைய எதிர்ப்பு நடவடிக்கைகளையும் செய்து வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தக் கள்வர் கூட்டத்தை காப்பாற்றும் முயற்சியிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.