இலங்கையின் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் பல உதவிகள் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று வருட காலத்திற்கு சலுகை வட்டி அடிப்படையில் இந்த நிதி வழங்கப்படவுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை ஜேர்மனியில் நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 49 ஆவது நிதி அமைச்சர்கள் மாநாட்டில் 67 நாடுகள் பங்கேற்றிருந்தன. இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மாநாட்டில் பங்கேற்றார்.
இப் பங்கேற்பின் போதே இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பெற்றுக் கொள்ளப்படும் இவ் நிதியின் மூலம் நாட்டிலுள்ள சில பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும், புதிய ரயில் பாதைகள், துறைமுக அபிவிருத்தி, மின் பங்களிப்பு வலையத் திட்டம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கும் பயன்டுத்தப்படவுள்ளது.