Breaking
Fri. Nov 15th, 2024
இலங்கைக்கு 51 பில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட அபிவிருத்திக் கடன் உதவி உள்ளிட்ட மேலும் பல பொருளாதார அனுகூலங்களைப் பெற்றுக்கொடுக்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இன்று விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த வேளை அவர் இதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட அழைப்பிற்கிணங்க G7 நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி அந்நாட்டு பிரதமரை இன்று சந்தித்தார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கு, 38 பில்லியன் யென்களை கடனுதவியாக வழங்குவதற்கு ஜப்பான் பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோய் நிவாரணத் திட்டத்திற்காகவும் முழு இலங்கையையும் இணைக்கும் மின்விநியோகக் கட்டமைப்புக்களை ஸ்தாபிப்பதற்கும் இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
தேசிய நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகள் தொடர்பில் ஜப்பானிய பிரதமர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
ஜப்பான் முறைமைக்கமைய டிஜிட்டல் தொழில்நுட்ப ரீதியான தொலைக்காட்சி ஔிபரப்பினை ஔிபரப்புவதற்கு இலங்கை எடுத்த தீர்மானம் தொடர்பில் ஜப்பானிய பிரதமர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், புதிய திட்டங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாவது சந்திப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க ஒருங்கினைப்பு குழு ஒன்றை அமைப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டது.
அதேபோன்று, இலங்கையின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் இரு நாடுகளினதும் அரச தலைவர்கள் இங்கு கலந்துரையாடியுள்ளதுடன், ஜப்பான் இதுவரை இலங்கைக்கு வழங்கியுள்ள ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.

By

Related Post