சவூதி அரேபியாவுக்கு தொழில்களுக்குச் செல்லும் இலங்கையர்களுக்காக நடத்தப்படும் பயிற்சிப் பாடநெறிகளின் தரத்தை உயர்த்துவதற்காக சவூதி அரேபிய பயிற்சி ஆலோசகர்களின் ஒத்துழைப்பை பெற இணக்கம் காணப்பட்டுள்ளது.
அமைச்சர் டிலான் பெரேராவின் உத்தரவின் பேரில் இது தொடர்பான விசேட பேச்சுவார்த்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தலைமையகத்தில் நடைபெற்றது.
பணியகத் தலைவர் அமல் சேனாலங்காதிகார சவூதி அரேபிய தொழில் முகவர் சங்கத் தலைவர் பொட் அல்பதா மற்றும் பிரதிநிதிகள் இப் பெச்சுவார்த்தைகளில் பங்குபற்றினர்.
சவூதி அரேபிய தொழிலமைச்சருடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமுல் படுத்துதல் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி இங்கு ஆராயப்பட்டது. சவூதியில் புதிய தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளல், பராமரிப்பு வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளல் சமூகப் பாதுகாப்பு, சம்பள அதிகரிப்பு போன்றவை இதன்போது கருத்திற் கொள்ளப்பட்டன. சவூதியில் தொழில் புரிவோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல். அத்தகைய பிரச்சினைகள் மீண்டும் எழாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
இவ்விடயம் தொடர்பாக பணியகத் தலைவர் சவூதி அரேபிய தொழில் முகவர் சங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட தொழில் முகவர் ஊடாக மட்டுமே ஆட்களை சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்கு அனுப்ப வேண்டுமென சமர்ப்பிக்கப்பட்ட யோசனை தொடர்பாக அமைச்சரின் விசேட கவனம் செலுத்தப்படுமென பணியகத் தலைவர் தெரிவித்தார்