Breaking
Mon. Dec 23rd, 2024
இலங்கையர்களில் 80 சதவீதமானோர்  ‘நேரமில்லை” என்ற  போலியான காரணத்தை சுட்டிக்காட்டி தங்களது இலக்குகளை தட்டிக்கழிப்பதாக புள்ளிவிபரமொன்று குறிப்பிடுகின்றது. மேலும் இதில் 45 வீதமானோர் அச்சம் காரணமாகவே தங்களது இலக்குகளிலிருந்து பின்வாங்குவதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் நேற்று -16- நற்குண முன்னேற்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த  விசேட கலந்துரையாடலின் போது குறித்த அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகர உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையர்களாகிய நாம் நாளாந்தம் தமது இலக்குகளை வெற்றிக்கொள்ளாமைக்கு சராசரியாக நான்கு வெவ்வேறு காரணங்களை முன்வைக்கின்றோம்.
இதில்  இலங்கை சந்தை ஆராய்ச்சி பணியகத்தின்  ஆய்வின்படி 80 சதவீதமானோர்  ‘நேரம் இல்லை” என்ற காரணத்தையும்,  45 சதவீதமானோர்’தோற்றுவிடுவோம் என்ற பயம்” என்ற காரணத்தையும்,  38 சதவீதமானவர்கள் ‘முயற்சி செய்வதில் பயனில்லை” என்ற காரணத்தினை முன்வைப்பதோடு, 28 சதவீதமானவர்கள் ‘எவ்வாறு அதனை செய்வது என எனக்கு தெரியாது” எனவும் பதிலளித்துள்ளனர்.
குறித்த ஆய்வின் மூலம் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், இவ்வாறான போலியான காரணங்களைக் கொண்டு நாம் நமது இலக்குகளை தவறவிடுகின்றோம். நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் தங்களது இலக்குகளை வெற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவே இலங்கையர்கள் எனும் அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு செயற்படுவதால் மாத்திரமே எமது இலக்குகளை அடைய முடியும் என குறித்த ஆய்வின் மூலம் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த நற்குண முன்னேற்ற அமைப்பின் கலந்துரையாடலில் பங்குகொண்ட சிறப்பு விருந்தினரான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரிய ஜயந்தி குரு உதும்பலா தெரிவிக்கையில், இலக்குகளை நோக்கி பயணிக்கும் எமக்கு  வெறும் சாக்குபோக்குகள் தடையாக அமைந்தவிடக்கூடாது.
நாம் நினைக்கின்ற இலக்குகளை அடைவதற்கான திறனை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு திறனை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில் சாக்கு போக்குகளை சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது. இலக்குகளை அடைய நம்முன் காணப்படுகின்ற தடைகளை தகர்த்துவிட வேண்டும். இயலாமை என்ற ஒன்றை எம்மிடத்தில் இருந்து நீக்கி, இலக்குகளுக்கான பாதையை அமைத்துக்கொண்டு அதில் வெற்றிபெற வேண்டும். அதை விடுத்து சாக்குபோக்குகள் சொல்லி, நமது இலக்குகளை நாமே தவறவிடுவதனை நாம் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

By

Related Post