– நெவில் அன்தனி –
இந்தியாவின் குவாஹாட்டியிலும் ஷில்லொங்கிலும் நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்றெடுத்த 25 தங்கப் பதக்கங்கள் போதுமானது என்றோ பெருமைப்படக்கூடியதென்றோ கூறமுடியாது என விளையாட்டு விழாவிலிருந்து நாடு திரும்பிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.
அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ் விளையாட்டு விழாவில் இலங்கையின் பெறுபேறு பற்றி கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
‘‘இற்றைக்கு கால் நூற்றாண்டுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஐந்தாவது தெற்காசிய விளையாட்டு விழாவில் (1991இல்) பத்து விளையாட்டுப் போட்டிகளில் எமது நாடு 44 தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தது.
ஆனால் இம் முறை 23 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 700 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குகொண்ட போதிலும் 25 தங்கப் பதக்கங்களே கிடைத்துள்ளன.
1991 போட்டிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அவ் வருடம் வென்ற தங்கப் பதக்கங்களிலும் பார்க்க இரட்டிப்பு மடங்கு இம் முறை பெறப்பட்டிருக்க வேண்டும்’’ என்றார்.
எவ்வாறாயினும் கடந்த சில வருடங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் காணப்படுவதாக குறிப்பிட்ட தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் ஹேமசிறி பெர்னாண்டோ, ‘‘விளையாட்டுத்துறையில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவர் எமக்குக் கிடைத்துள்ளார்.
அவர் புத்தி சாதுரியத்துடன் செயற்பட்டு விளையாட்டுத்துறையை மேம்படுத்த கடுமையாக உழைக்கின்றார்.
எனவே, விளையாட்டுத்துறை அமைச்சு அதிகாரிகள் அமைச்சருடன் கைகோர்த்து எதிர்காலத்தில் இதனைவிட சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய இன்னும் பல வீர, வீராங்கனைகளை உருவாக்க முயற்சிக்கவேணடும்’’ என்றார்.
சில விளையாட்டுப் போட்டிகளில் மத்தியஸ்தர்களால் இலங்கைக்கு அநீதி இழைக்கப்பட்டமை குறித்து அவரிடம் வினவியபோது, ‘‘சில சில சம்பவங்கள் இடம்பெற்றிருக்கக் கூடும். அவை துரதிர்ஷ்டம்’’ என்றார்.
கபடியில் அநீதி: இலங்கை வீராங்கனைகள் கண்ணீர்
பங்களாதேஷுடனான மகளிர் கபடி போட்டியின்போது மத்தியஸ்தர்களால் தமது அணிக்கு அநீதி இழைக்கப்பட்டதாக இலங்கை மகளிர் கபடி அணி பயிற்றுநர், வீராங்கனைகளில் ஒருவர் ஆகியோர் குறிப்பிட்டனர்.
இலங்கை இறுதி ஆட்டத்தில் விளையாடத் தகுதிபெற்றால் தமது நாட்டு அணியினால் வெல்ல முடியாது என்ற அச்சம் காரணமா கவே இந்திய மத்தியஸ்தர்கள் தங்களுக்கு எதிராக செயற்பட்டதாக அவர்கள் கூறினர்.
இது குறித்து மேன்முறையீடு செய்த போதிலும் ஏற்பாட் டாளர்கள் அதனை ஏற்கவில்லை என இலங்கை கபடி அணியினர் கூறினர்.
குத்துச் சண்டையில் இலங்கைக்கு 2 பதக்கங்கள்
(ஷில்லொங்கிலிருந்து எஸ்.ஜே. பிரசாத்)
இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் ஷில்லொங்கில் நேற்று நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழா குத்துச் சண்டைப் போட்டியில் இலங்கைக்கு ஒரு வெள்ளிப் பதக்கமும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.
குத்துச் சண்டைப் போட்டிகளில் இலங்கை இதுவரை 2 வெள்ளிப் பதக்கங்களையும் 8 வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.
குத்துச் சண்டை
ஆண்களுக்கான 56 கிலோ கிராம் எடைப் பிரிவில் இலங்கை வீரர் ருவன் திலினவை 3 – 0 என்ற புள்ளிகள் அடிப்படையில் இந்திய வீரர் ஷிவதாப்பா வெற்றிகொண்டு தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார். திலினவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
ஆண்களுக்கான 40 கிலோ கிராம் எடை பிரிவில் இலங்கையின் நிமிது சப்ரமாது வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
குத்துச்சண்டை போட்டிகளுக்கான பதக்கம் வழங்கும் நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் ஹரீஸ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களை வழங்கிவைத்தார்.
மேரி கோமுடன் மோதும் அனுஷா
பெண்களுக்கான 51 கிலோ கிராம் எடைப் பிரிவுக்கான குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனையான அனுஷா கொடிதுவக்குவும் இந்தியாவின் மிகவும் பிரபல்யமான குத்துச்சண்டை சம்பியனான மேரி கோம் ஆகியோர் இன்று மோதுகின்றனர்.
தெற்காசிய விளையாட்டு விழா இன்று நிறைவு பெறுகிறது. mn