Breaking
Sat. Nov 2nd, 2024

இலங்கையின் அமைதி, நல்லிணக்க நடவடிக்கைகளை, அந்நாட்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு துரிதப்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.

 அப்போது, உலகம் முழுவதும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த தேர்தலை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மைத்ரிபால சிறிசேனா மற்றும் அந்நாட்டு பிரதமர் விக்கிரமசிங்கேவுக்கு அவர் பாராட்டுகளை தெரிவித்தார். இந்த வெற்றியை இலங்கையின் ஒற்றுமைக்கும் மாற்றத்துக்கும் அளிக்கப்பட்ட வாக்கு என்று குறிப்பிட்ட அவர், இலங்கை அதிபர் சிறிசேனாவின் வெற்றி இலங்கையின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் துரிதபடுத்துவதோடு, இந்தியாவின் அமைதி மற்றும் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

 இலங்கையை மிகவும் நெருக்கமான அண்டை நாடு என்றும், நட்பு நாடு என்றும் கூறிய பிரதமர் மோடி, இலங்கை அரசு மற்றும் இலங்கை மக்களின் விருப்பங்களை நனவாக்க இந்தியா தொடர்ந்து ஆதரவையும் பங்கையும் அளிக்கும் என்று உறுதி அளித்தார். ‘ஒரு சில அடி கூட ஒருவரின் பாதையை குறிப்பிட்டுக் காட்டும்’ எனச் சுட்டிக்காட்டியவர், உணமையான இலங்கை அரசை உருவாக்க அனைத்து மக்களின் கருத்துககளையும் ஏற்கும் இலங்கை அரசின் தலைமையைக் கண்டு தாம் வியப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசியல் நல்லிணக்கம் மற்றும் அனைவரும் பங்கு வகிக்கும் அரசை உருவாக்க புதிய அரசு எடுத்துள்ள முதல் முயற்சிகள் பாராட்டுக்குரியது என்று அவர் தெரிவித்தார். இந்திய நாட்டுக்கு பயணம் மேற்கொள்ளுமாறு விடுத்த தனது அழைப்பை ஏற்றுக்கொண்டதற்காக, இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும், அவரது வருகைக்காகக் காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார். அதேவேளையில், இலங்கைக்கு வருகை தருவதற்கான அழைப்பை ஏற்றுக்கொள்வதாக, இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Post