இலங்கையின் மிகப் பெரும் இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் நேற்று மாலை காலமானார்.
பெரிய ஹஸ்ரத் என காத்தான்குடி மக்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் தென் இந்தியாவின் காயல் மாநகரம் அருகே அமைந்திருக்கும் அதிராம் பட்டிணத்தில் பிறந்தாலும் அவர்களது வாழ்வின் பெரும் பகுதியை காத்தான்குடியில் கழித்துள்ளார்.
காத்தான்குடி மண்ணில் பல்துறை சார் அறிஞர்களை உருவாக்குவதில் முன்மாதிரி மிக்க பங்களிப்பொன்றை வழங்கியிருந்தார்..
பிறந்த மண், குடும்பம், உறவுகள் அனைத்தையும் துறந்து இந்த மண்ணுக்காகவும், இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காகவுமே வாழ்ந்திருக்கிறார்கள்.
காத்தான்குடி மக்கள் மனங்களில் இன நல்லுறவுச் சிந்தனைகளை வளர்த்தெடுப்பதில் அயராது பாடுபட்டுள்ளார்கள்.
குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைச் சம்பவங்களின் பின்னரும் தமிழ்-முஸ்லிம் இனநல்லுறவை கட்டியெழுப்புவதில் ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் முன்னின்று செயற்பட்டிருந்தார் என்று தேசிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் கலாநிதி றியாஸ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாகவே கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் பிள்ளையான் தொடக்கம் தமிழ் வேட்பாளர்கள் பலரும் முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து ஏராளம் விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்கள்.
இந்நிலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவுப் பாலம் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள இக்கால கட்டத்தில் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பாகும் என்ற கருத்துப்பட பல்வேறு அரசியல்வாதிகளும் தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
இன்று காலை பத்து மணியளவில் காத்தான்குடியில் நடைபெறவுள்ள ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் நல்லடக்கத்தில் கலந்து கொள்வதற்காக முக்கிய அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மாத்திரமன்றி, தமிழ்ச் சமூகத்தின் முக்கிய செயற்பாட்டாளர்கள் , பொதுமக்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது காத்தான்குடிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ஷெய்குல் பலாஹ் அப்துல்லாஹ் ஆலிம் ஜனாசா நல்லடக்கம் இன்று காலை பத்து மணியளவில் காத்தான்குடியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.