Breaking
Mon. Dec 23rd, 2024
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் Wencai Zhang உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று  முன்தினம் (08) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும் உதவிகளை ஊழல் மோசடிகளின்றி சரியாக முதலிடுவதற்கு தமது அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாதாகத் தெரிவித்தார்.

மேலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களை உரியகாலத்தில் நியமங்களுக்கு ஏற்ப நிறைவு செய்வதற்கு குறித்த பிரிவினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். குடிநீர், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயத்துறைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையின் சகல பிரதேசங்களுக்கும் சமனான முறையில் அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக வடக்கு மக்கள் இழந்து போன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கையுடன் 50 வருட காலமாக தொடர்புகளை பேணி வருவதுடன், இலங்கையின் அபிவிருத்திக்காக இதுவரையில் 7.9 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி Huiping Huang, Sri widowati, tadatery Hayashi Shr ஆகியோர்  இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

By

Related Post