இலங்கையில் அதிகமான முதலீடுகளை செய்வதற்கு ஜப்பான் விருப்பம் கொண்டுள்ளதாகவும், கடந்த காலங்களில் ஜப்பான் நாடும் அந்த நாட்டு மக்களும் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் வர்த்தக சமூகத்தினர் இன்று அமைச்சரை அமைச்சில் சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போது இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மிகவும் உயர் நிலையில் இருப்பதாகவும், இலங்கை உற்பத்திப் பொருட்களுக்கு ஜப்பான் நாட்டின் சந்தை வாய்ப்பு மிகவும் இன்றியமையாததாக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜப்பான் பெனசொனிக் இலத்திரணியல் உற்பத்தி நிறுவனத்தின் 2ஆவது தலைவரும், கண்சாப் பொருளாதார அமைப்பின் பிரதித் தலைவருமான மசையுகி மட்சூசிதா தலைமையிலான 30பேர் அடங்கிய வர்த்தக பிரதிநிதிகள் இதன்போது கலந்துகொண்டனர்.
இலங்கையில் முதலீட்டுத் துறைக்கு ஜப்பான் பெரும் பங்காளியாக உள்ளதாகவும் கடந்த வருடத்தை விட இவ்வருடம் 31% அதிகரிப்பு இரு நாட்டு வர்த்தகத்தின் மூலம் இலங்கை பெற்றுள்ளது. அந்த வகையில் 236 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கையில், ஏற்றுமதி மூலம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.
தேயிலை, மீன். தைத்த ஆடைகள். தெங்கு பொருள் தயாரிப்புக்கள் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி மிகவும் சிறப்பாக உள்ளதாகவும் மேலும் ஜப்பான் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜப்பான் விஜயத்தினை மேற்கொண்டு ஜப்பான் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியமை சிறப்பம்சமாகும்.
மன்னார் மாவட்டம் எனது மாவட்டமாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரதான பாலம் ஜப்பான் நாட்டு நிறுவனமான ஜைக்காவினால் நிர்மாணிக்கப்பட்டது. இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்றத்திற்காக ஜப்பான் உதவி செய்துள்ளதையும் அமைச்சர் இங்கு நினைவுபடுத்தினார்.
அமைச்சின் பிரதி நிதிகளான அமைச்சின் செயலாளர் தென்னகோன்,மேலதிக செயலாளர் திருமதி.சீதா செனவிரத்ன,சமன் பெரேரா,அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.