Breaking
Mon. Nov 25th, 2024

வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை நேற்று வியாழக்கிழமை (ஜனவரி 01, 2015) முதல் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குகின்ற நடைமுறையை இலங்கை அரசாங்கம் 2011 ஆம் ஆண்டில் தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருந்தது. ஆரம்பத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு நிரந்தர வதிவிட உரிமையும், அதன் பின்னர் இரட்டைக் குடியுரிமையும் வழங்கப்பட்டுவந்தது.

ஆனால், சொந்த நாட்டில் வந்து நிரந்தரமாக வசிப்பதற்கும், பணத்தை முதலீடு செய்வதற்கும் பிள்ளைகளை அரச பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதற்கும் வசதியாக, ஐந்தாண்டுகால காத்திருப்பின்றி நேரடியாக இரட்டைக் குடியுரிமையை வழங்கிவிடுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடமும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்து வந்திருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் சிலர் அரச அல்லது தனியார் துறைகளில் தொழில்பார்க்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இரட்டைப் பிரஜாவுரிமையை உடனடியாக வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தமயந்தி ஜயரட்ன கூறியுள்ளார்.

பழைய நடைமுறையைப் போலல்லாமல், இனிமேல் இரட்டைப் பிரஜாவுரிமையைப் பெற விரும்புவோர் நேர்முகத் தேர்வொன்றிலும் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்த நடைமுறையில், முதலில் அந்தந்த நாடுகளின் தூதரகங்கள் அல்லது உயர்ஸ்தானிகராலயத்தின் அத்தாட்சிப்படுத்தலுடன் விண்ணப்பப் பத்திரங்களை அனுப்ப வேண்டும். தூதரகம் அந்த விண்ணப்பதாரியின் தகைமை தொடர்பில் சான்றிதழ் அளித்த பின்னர், அந்த விண்ணப்பத்தை அமைச்சரவையின் சிறப்புக் குழுவொன்று ஆராயும்.

விண்ணப்பதாரி சமர்ப்பித்துள்ள ஆவணங்களை சரிபார்த்து உறுதியான பின்னரே, அடுத்தக் கட்டத்துக்கு விண்ணப்பம் அனுப்பப்படும். அதன்பின்னர், விண்ணப்பதாரி நேர்முகத் தேர்வொன்றில் கலந்துகொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு முடிந்த பின்னர், நாட்டின் பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக விண்ணப்பம் அனுப்பப்படும்.

ஜனாதிபதியின் சம்மதம் கிடைத்தவுடன் உடனடியாக இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்புத் துறையின் மேலதிகச் செயலாளர் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

Related Post