இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்ரேலுக்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் இடமளிக்க முயற்சிக்கின்றமையினால் முஸ்லிம்கள் அரசின் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.
அவ்வாறான நிலைமை உருவானால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் ஐ..தே க. கட்சியையும் ஸ்ரீ.ல.சு. கட்சியையும் புறந்தள்ளி விட்டு ஜே.வி.பி. க்கே வாக்களிப்பார்கள் என தேசிய ஒருமைப்பாட்டு இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீ.ல. சு. கட்சியின் முஸ்லிம் பிரிவின் தலைவருமான ஏ.எச்.எம். பௌசி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இது பற்றி இலங்கை முன்னணி பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில்,
எமது நாட்டின் பிரதமராக இருந்த ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவின் காலத்தில் இலங்கையிலிருந்து இஸ்ரேல் வெளியேற்றப்பட்டது.
அதன் பிறகு தொடர்ந்து இஸ்ரேல் இலங்கையில் காலூன்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் அது பலனளிக்கவில்லை.
தற்போது இஸ்ரேல் தூதுக் குழுவுடன் அமைச்சர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். குழுவினர் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேலுக்கு இலங்கை இடமளிக்க முயற்சிக்கின்றமையினால் முஸ்லிம்கள் அரசுக்கு விரோதமாகியுள்ளனர். அதனால் அரசு இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளையும் புறந்தள்ளிவிட்டு அவர்கள் ஜே.வி.பி.க்கே வாக்களிப்பார்கள்.
இதேவேளை இலங்கை தொடர்ந்து பலஸ்தீனர்களுக்கு வழங்கிவரும் உதவிகளையும், சலுகைகளையும் குறைக்கக் கூடாது.
பலஸ்தீனத்தில் இஸ்ரேலினால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும்.
மனிதாபிமான ரீதியில் அவர்களுக்கு உதவ வேண்டும். இதை விடுத்து இஸ்ரேலை ஆதரித்து அரசாங்கம் தவறான கொள்கைகளை முன்னெடுக்கக் கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்திலும் இதே கருத்தினை தான் வலியுறுத்தியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை அரசு இஸ்ரேல் தூதுக்கு குழுவினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளமை மற்றும் சங்கமொன்று நிறுவியுள்ளமைக்கும் அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டார்.