Breaking
Sun. Dec 22nd, 2024
இலங்கையில் இயங்கும் சகல செய்தி இணையதளங்களும் இம்மாதம் 31-ம் திகதிக்கு முன்னதாக ஊடக அமைச்சில் பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஊடக தர்மங்களுக்கும், தராதரங்களுக்கும் உட்பட்ட வகையில் செய்தி இணையதளங்கள் தடையின்றி இயங்குவதற்கு இந்த பதிவு அவசியம் என்று நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தின் கீழ் ஏற்கனவே பல இணையதளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்துகொள்ளாத இணையதளங்கள் உரிய திகதிக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 31-ம் திகதிக்கு பின்னர், பதிவு செய்யப்படாத இணையதளங்கள் சட்டத்துக்கு முரணானவையாக கருதப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

இவ்வாறான அறிவித்த முந்தைய அரசாங்கக் காலத்திலும் விடுக்கப்பட்டதாகவும் சில இணையதளங்கள் அப்போதைய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதாகவும் இலங்கையிலிருந்து இயங்கும் தமிழ்மிரர் பத்திரிகை மற்றும் இணையதளத்தின் ஆசிரியர் ஏ.பி. மதன் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னைய அரசாங்கத்தினால் சில இணையதளங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை புதிய அரசாங்கம் தளர்த்தியதாகவும், ஆனால் இப்போது ஊடக நெறிமுறைகளுக்கு புறம்பாக பல இணையதளங்கள் இயங்குவதாக அரசாங்கம் கருதுவதாகவும் அவர் கூறினார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் சில இணையதளங்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுவருகின்ற நிலையில், இவ்வாறான அறிவித்தல் அரசாங்கத்திடமிருந்து வந்திருப்பதையும் மதன் சுட்டிக்காட்டினார்.

இணையதளங்களை பதிவு செய்வதன் மூலம், அவற்றில் வெளியாகும் தகவல்கள் தொடர்பில் அவற்றுக்கு பொறுப்பானவர்களை கேள்விக்குட்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற ரீதியில் இந்த அறிவித்தலை அரசாங்கம் விடுத்திருப்பதாகவும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் உறுப்பினர் ஏ.பி. மதன் கூறினார்.

By

Related Post