Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையின் பல பகுதிகளில் பரவிவரும் புதுவகையான வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலர் மரணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இன்புளுயென்சா ´ஏ´யில் எச்1 என்1 எனப்படும் வைரஸ் காய்ச்சல் என இது அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

வடக்கில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல் பரவியிருப்பதாக வவுனியா அரச பொது மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், மற்றும் 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களையே இந்தக் காய்ச்சல் அதிகம் தாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதியவர்களில் இரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களே இந்த காய்ச்சலினால் கூடுதலாக பாதிக்கப்படுவதாக மருத்துவர் சுதர்சினி கூறினார்.

வைரஸ் தொற்றாத வகையில் தனிப்பட்ட சுகாதார முறைகளைக் கைக்கொள்வதுடன், நோய் அறிகுறிகளைக் கண்டதும் உடனடியாக அரச மருத்துவமனைக்குச் சென்று வைத்திய உதவி பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இந்த நோயை அடையாளம் கண்டவுடன், அதற்கென சுகாதார அமைச்சினால் அரச மருத்துவமனைகளுக்கு மட்டுமே விநியோகித்துள்ள குளிசையை வைத்திய அதிகாரிகளின் சிகிச்சை முறைக்கமைவாக உட்கொண்டால் நோய் உடனடியாகக் குணமடையும் என்றும் சுதர்சினி தெரிவித்தார்.

இந்த வைரஸ் ஏன் பரவுகிறது என்ன காரணத்தினால் திடீரென இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கான சரியான விளக்கம் தெரிவிக்கப்படவில்லை. இருந்தபோதிலும், வைரஸ்கள் புதிது புதிதாக உற்பத்தியாகி அவைகள் மனிதர்களிடத்தில் பரவி பலவிதமான நோய்களை ஏற்படுத்தி வருவதாகவும், அத்தகைய சில நோய்களுக்கு மருந்துகள் இல்லையென்றும் அந்த வகையிலேயே இந்த இன்புளுயென்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் பரவியிருக்கிறது என நம்பப்படுவதாகவும் சுதர்சினி கூறினார்.

இந்தக் காய்ச்சலைச் சுகப்படுத்துவதற்கான மருந்து கிடைத்திருப்பது அதிஸ்டவசமானது எனவும் வவுனியா பொது மருத்துவமனையின் பதில் மருத்துவ பணிப்பாளர் சுதர்சினி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

Related Post