Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கையில் போலியோ நோய் அச்சுறுத்தல் இல்லை எனவும், இரண்டு தசாப்தங்களாகவே நாட்டில் போலியோ நோயாளிகள் பதிவாகவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய போதும் நாட்டில் போலியோவை ஒழிக்க முடிந்துள்ளதாகவும், இதற்கு ரொடரி அமைப்பின் உதவியே காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

107வது ரொடரி இன்டநெசனல் மாநாட்டில் (Rotary International Convention) கலந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் இதன்போது மேலும் கூறியதாவது,

1995ம் ஆண்டு யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து ரொடரி இன்டநெசனல் உறுப்பினர்கள் சிலர் இலங்கை சுகாதார அமைச்சுடன் கலந்துரையாடினர். அவர்களது நோக்கம் தேசிய நோய்த்தடுப்பு தினத்தை ஏற்பாடு செய்வதே, இதன் நிமித்தம் ரொடரி ஒன்றரை மில்லியன் டொலர்களை வழங்க உறுதியளித்தது, நாடுமுழுவதும் போலியோ நோய்த்தடுப்பு ஊசியை போடுவதற்கு தேவையான மிகுதித் தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் அதனை ஏற்றுக் கொண்டனர். அப்போது நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் நடைபெற்றதால், அந்தப் பகுதிகளைத் தவிர்த்து இந்த நடவடிக்கையை ஏனைய பகுதிகளில் மட்டும் முன்னெடுக்க அதிகாரிகள் பரிந்துரைத்தனர்.

ஆனால் ரொடரி அதற்கு இணங்கவில்லை, இதன்பொருட்டு ரொடரி நிதி அளித்துள்ள நிலையில் அதனை நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டும் விநியோகிக்க இடமளிக்க முடியாது என கூறினர். அதற்கு அதிகாரிகள் “உங்களுக்கு தெரியவில்லையா நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வடக்கு, கிழக்கில் எமது நிர்வாகம் இல்லை, எங்களை என்ன செய்யச் சொல்கின்றீர்கள்..”என வினவினர்.

அதற்கு ரொடரி தலைவர், “அதனைப் பற்றி நீங்கள் கவலை பட வேண்டாம். யுத்தத்தைப் பற்றி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்.

முடிவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் அதற்கு இணங்கினர். அதன் பின்னர் இரண்டு மூன்று மாதங்கள் கழித்து ரொடரி தலைவர் ரவீந்திரன் யுனிசெப் மற்றும் ரொடரி நிறுவனத்துக்கு கிடைக்கப் பெற்ற கடிதம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தார். அது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் அனுப்பப்பட்ட கடிதம்.

அதில், தேசிய நோய்த் தடுப்பு தினத்திற்காக உங்கள் அரசாங்கம் ஆயுதத்தை கீழே வைக்கத் தயார் எனில், நாங்களும் ஆயுதத்தை கீழே வைத்து யுத்த நிறுத்தத்திற்கு வருகிறோம் என இருந்தது.

இதன்படி, யுத்த நிறுத்தம் செயற்படுத்தப்பட்டது, இரு தரப்பினரும் ஆயுதத்தை கீழே வைத்தோம், ரொடரி மற்றும் யுனிசெப், செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஜீப் ஒன்றில் வௌ்ளைக் கொடியுடன், அதுவரை யாரும் செல்லப் பயந்த வடக்கு மற்றும் கிழக்குக்கு சென்றனர்.

இதன் பிரதிபலனாக போலியோ அற்ற இலங்கையை உருவாக்க எம்மால் முடிந்தது. அந்த தினம் எமக்கு மற்றொரு படிப்பினையை தந்தது, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நாம் அச்சம்மிக்க சூழலில் இருந்தாலும் அனைவரும் எமது குழந்தைகளை நேசிக்கிறோம் என்பதே.

மேற்கண்டவாறு பிரதமர் கருத்து வௌியிட்டுள்ளார்.

By

Related Post