Breaking
Sun. Dec 22nd, 2024

“இலங்கையின் தேசிய நல்லிணக்கத்தை வலுவடையச் செய்யும் போதுஇ சுமார் 30 ஆண்டுகள் நிலவிய கொடூர யுத்தத்தை எதிர்கொண்ட ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கு கிடைத்த அனுபவங்களினூடாக மீண்டும் ஒரு முறை எச்சந்தர்ப்பத்திலும் யுத்தம் உருவாவதைத் தடுத்தல்இ நாட்டின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்தல், தேசிய நல்லிணக்கத்தினூடாக இனங்களுக்கிடையே பலமான ஒற்றுமையை ஏற்படுத்தல் ஆகியவற்றினூடாக முன்னிலை வகிக்கும் ஒரு நாடாக இலங்கையை மாற்றுவதற்கு முன்னுரிமையளிக்கிறோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

“இலங்கையில் புதிய மாற்றத்துக்கான ஒரு யுகத்தை ஆரம்பித்து, கடந்த சுமார் 20 மாதங்களுக்குள் நாட்டுக்குத் தேவையான அரசியல்இ பொருளாதார மறுசீரமைப்புக்கு   முன்னுரிமையளித்து செயற்பட்டுள்ளோம்.

விசேடமாக எனது அரசாங்கம் பதவியேற்பதற்கு  முன்னர் இலங்கை மக்கள் அச்சம் மற்றும் பீதியில் வாழ்ந்த ஒரு பின்னணியினை நாம் அகற்றி, அதற்குப் பதிலாக மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் ஜனநாயக ரீதியிலான சமூகமொன்றில் அனைவரும் வாழ்வதற்குத் தேவையான அடிப்படையை உருவாக்கியுள்ளோம்.

எனது அரசாங்கத்தின் நோக்கம், உலக மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் நாடுகளுள் ஒன்றாக இலங்கையை மாற்றுவதாகும். அதற்காக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை உறுதிசெய்வதனூடாகவும் பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதனூடாகவும் உலகின் பலம் பொருந்திய சிறந்த மக்களாக இலங்கை மக்களை மாற்றுவது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமும் அபிலாசையும் ஆகும்.

வறுமை, இன்று முழு உலகினையும் ஆட்டிப் படைக்கும் ஒரு சவாலாக மாறி உள்ளது. அதனால் இலங்கையை வறுமையிலிருந்து விடுவிக்கும் ஆண்டாக 2017ஆம் ஆண்டை நாம் பெயரிட்டுள்ளோம். இன்று, உலகின் பல நாடுகளில் சர்வதேச ரீதியாக யுத்தத்தின் பல்வேறுபட்ட தன்மைகள் சில சந்தர்ப்பங்களில் மிகக் கொடூரமான நிலைமைகளை உருவாக்கியதைப் போன்றே ஒற்றுமையின்மை, வெறுப்பு மற்றும் குரோதம் என்பன நிறைந்துள்ள புரையோடிப் போன சமூகங்களை நாம் காணமுடிகிறது.

அங்கு மனித சமுதாயத்துக்குத் தேவையான பண்பாடு பாரதூரமானதொரு பிரச்சினையாக மாறியுள்ளது. சமூகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பல்வேறுபட்ட மோதல்களின் போது, பண்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் பணிக்கு சகல நாடுகளும் முன்னுரிமையளிக்க வேண்டும்.

இலங்கை ஒரு பௌத்த நாடு என்றவகையில், தேரவாத பௌத்த சிந்தனையின் அடிப்படையில், இன்று உலகில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமென்பதை நான் உணர்கிறேன்.
அதேபோன்று கிருஸ்தவமதம், இஸ்லாம் மதம் போன்றே இந்துமதம் உள்ளிட்ட ஏனைய மதங்களின் ஆன்மீக சிந்தனைகளை மேலும் விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக அனைத்து நாடுகளினதும் ஆசீர்வாதம் அவசியம்.

தேவையான இம்மாற்றங்களை மேற்கொள்ளும் வேளை, இலங்கை போன்றே உலகின் பல நாடுகள் எதிர்கொள்ளும் பாரதூரமான ஒரு பிரச்சினை பற்றி ஐ.நா.வின் கவனத்தை ஈர்ப்பதற்கு விரும்புகிறேன். ஒட்டுமொத்த மனித சமூகம் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் அனர்த்தத்துக்கும் அவலத்துக்கும் ஆளாக்கியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே அதுவாகும்.

சமூக ரீதியாக பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர் சமுதாயம் மற்றும் அனைத்து மக்களும் பாரதூரமானதொரு அனர்த்தத்தினை எதிர்நோக்கியுள்ளதுடன் இப்போதைப்பொருள் பிரச்சினையை சர்வதேச ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் இல்லாதொழித்தல், முறியடித்தல் மற்றும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் கவனத்துக்கு கொண்டுவருவதுடன், தற்போதுள்ளதை விடவும் முறையான மற்றும் தீர்க்கமான ஒரு வேலைத்திட்டத்தின் அவசியத்தை  நாம் வலியுறுத்துகிறோம்.

எனது அரசாங்கம் ஜனநாயகம், சுதந்திரம், நல்லாட்சி மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை உறுதிசெய்வதற்குத் தேவையான பல்வேறு நடைமுறைகளின் சீரான பரிவர்த்தனை மூலம் தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்தி, மீண்டும் எனது நாட்டில் யுத்தம் ஒன்று உருவாவதை தடுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அறிமுகப்படுத்தப்படும் புதிய அரசியல் மறுசீரமைப்பினூடாக எனது நாட்டைப் போன்றே உலகின் அனைத்து நாடுகளும் தனக்கே உரித்தான தேசிய சிந்தனை மற்றும் தொலைநோக்கு என்பவற்றுடன் சமூக ஜனநாயக ரீதியிலான ஓர் அரசியல் பயணத்தை மேற்கொள்ளவேண்டியுள்ளது.

இதற்கு ஏற்புடைய அனுகூலமான முறைமைகளை அடிப்படையாகக் கொண்ட மறுசீரமைப்புக்காக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கருத்தாடல் என்பன எமது நாட்டைக் கட்டியெழுப்பும் பணியின் போது முக்கிய காரணிகளாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம். எதிர்பார்த்த இலக்குகளை அடைந்துகொள்வதற்காக அவ்வாறு பயணித்த நான்  உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பினையும் ஆசீர்வாதத்தையும் தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post