இலங்கையுடனான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் சீனா ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் ஓர் கட்டமாக சீன விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு ஸென்மின் இவ்வாறு விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியா மற்றும் ஜப்பானுக்கான விஜயங்களை மேற்கொண்ட நாடு திரும்பியுள்ள நிலையில், சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லியு ஏற்கனவே பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமர் ரணில் விக்ரசிங்கவிற்கு வாழ்த்து தெரிவித்தல் மற்றும் சீனாவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக லியு இலங்கை விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் சீனா இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்தமை குறிப்பிடத்தக்கது.புதிய அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் உறவுகளை பேண வேண்டுமென்ற அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
இவ்வாறான ஓர் நிலையில் சீனா இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் முற்சியில் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.