இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை என்பர் டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கற்றுமுடித்திருப்பதாக தனது முகப்புத்தகத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க்கில் வாழ்ந்து வருகின்றார்.
ஆஸ்திரியா சென்று இதற்கான விசேட கல்வியை பெற்று டென்மார்க் திரும்பியியுள்ள அர்ச்சனா செல்லத்துரை, வர்த்தக விமான சேவையில் தமிழ் பெண்கள் விமான ஓட்டிகளாக வருவதற்கான வாய்ப்புக்களை நோக்கி எமது கனவுகள் விரிவடைய வேண்டும் என்றும், அடுத்து போயிங், எயார் பஸ் விமானங்களை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்து டேனிஸ் மொழி ஆசிரியையாக இருந்த இவர் , விமானியாக படிப்பதற்காக அமெரிக்கா சென்று மியாமியில் டீன் இன்ரநாஷனல் விமானிகள் கற்பித்தல் கல்லூரியில் படித்து சித்தியடைந்தார்.
இறுதிப் பரீட்சையின் போது விமானத்தை அமெரிக்காவின் மியாமியில் இருந்து அத்திலாந்திக் சமுத்திர வழியாக தனி ஒருவராக ஆறு மணி நேரம் பறந்து சென்று மூன்று விமான நிலையங்களில் விமானத்தை இறக்கி ஏற்றி சிறப்பு சித்தி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் பெற்ற ஏப்.ஏ.ஏ லைசென்சை ஐரோப்பாவில் பாவிக்க வேண்டுமானால் அதை ஐரோப்பாவிற்கான ஈ.ஏ.எஸ்.ஏ ஆக மாற்ற வேண்டும் இதற்காக டென்மார்க்கில் லேண் ரு பிளைட் என்ற விமானக் கல்லூரியில் படித்து 14 பரீட்சைகள் எடுத்து, பின்னர் சுவீடனிலுள்ள டைமன்ட் பிளைட் அக்கடமியில் தனியான பறப்புக்களை பறந்து ஐரோப்பிய சட்டங்களுக்கு அமைவாக தனது லைசென்சை மாற்றிக்கொண்டார்.
பின்னர் சன் எயார் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்து, டென்மார்க் ஓகூஸ் நகரத்திலுள்ள கிறைபேர்ட் விமான நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்திரியா சென்று விமானப்பறப்புக்கான ரைப்ரைட்டிங் எனப்படும் கற்கையை விசேடமாகக் கற்று சென்ற வாரம் அல்சி எக்ஸ்பிரஸ் விமானத்தை கச்சிதமாக ஓட்டி சித்தியடைந்தார்.
இந்த விமானத்திலேயே சமீபத்தில் பிரான்சில் நடந்த ஐரோப்பிய உதைபந்தாட்டத்திற்காக ஜேர்மன் நாட்டு அணி ஏற்றிச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.