Breaking
Fri. Nov 15th, 2024

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தினால் பொது முகாமைத்துவ முதுமானி இலத்திரனியல் ஆட்சி (MPM – Master of Public Management in E-Governance) என்ற புதிய பாடநெறியொன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஆரம்பத்தில் பொது முகாமைத்துவ முதுமானி என்ற பிரிவில் மட்டுமே நடைபெற்றது. தற்போது இக்கற்கை நெறியானது இரண்டு பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அவ்வகையில் பொது முகாமைத்துவ முதுமானி (Master of Public Management) மற்றும் இலத்திரனியல் ஆட்சி (Master of Public Management in E-Governance) என்ற இரு பிரிவுகளாகவே இப்பாடநெறி நடாத்தப்படவுள்ளது என இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் பதில் பொதுப் பணிப்பாளர் பேராசிரியர் எம். திலகசிறி தெரிவித்தார்.

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் அபிவிருத்தியில் பொருளாதாரதுறையின் பங்களிப்பு இன்றியமையாததது. அத்துடன் அபிவிருத்தியின் பங்களிப்புக்களில் தீர்மானம் எடுப்போர் , கொள்கையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவ்வகையில் நாட்டுக்கு சிறந்த கொள்கையாளர்களையும், தீர்மானம் எடுப்போர்களையும் உருவாக்க எமது நிறுவனம் அளப்பரிய பங்களிப்பினை செய்து வருகிறது.

இந்த நிர்வாக நிறுவனம் ஆசிரியர்கள் பேராசிரியர்களையோ உருவாக்க முன்நின்று செயற்டுவதிலும் பார்க்க நல்ல சிறந்த முகாமையாளர்களை, தீர்மானம் எடுக்கும் கொள்கையாளர்களை உருவாக்குவதிலேயே ஆர்வத்துடன் முன்நின்று செயற்படுகின்றது.

1982 ஆம் ஆண்டின் பாராளுமன்ற சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட  இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகம் பயிற்சியளித்தல், மற்றும் ஏனைய பட்டப்பின் படிப்பு கற்கை நெறிகள், முகாமைத்துவ ஆலோசனைச் சேவைகள், மீளாய்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளினூடாக அரசாங்க மற்றும் அரை அரசாங்கத்துறை முகாமையாளர்கள் மற்றும் அமைப்புக்கள் என்பவற்றின் செயலாற்றுகைத் திறனை மேம்படுத்துவதில் 33 வருட அர்ப்பணிப்புச் சேவையினைப் பூர்த்தி செய்துள்ளது.

அவ்வகையில் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் பொது முகாமைத்துவ முதுமானி பட்டம் 2004 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 12 வருட கால சேவையினை கொண்டுள்ள இப்பாடநெறி நானூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. தற்போது இலத்திரனியல் ஆட்சி (Master of Public Management in E-Governance) என்ற புதிய பாடநெறியை ஆரம்பித்து அரச சேவையாளர்களை இலத்திரனியல் ஆட்சியில் முன்னின்று செயற்பட வைக்க உதவவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிறுவனத்தில் கல்வியை தொடர்வதில் உள்ள நன்மைகள் குறித்து ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளித்த பொதுப்பணிப்பாளர், மலேசிய தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரி, அவுஸ்திரேலியா மொனேஸ் பல்கலைக்கழகம், தாய்லாந்து ஶ்ரீ பெதும் பல்கலைக்கழகம், சீன மக்கள் அரசாங்கத்தின் உவ்வாங் விஞ்ஞான தொழில்நுட்பம் ஆகிய பல்கலைக்கழகங்களுடனான கல்வித் தொடர்புகளை பேணுதல் மட்டுமன்றி அப் பல்கலைக்கழகங்களில் செயன்முறை பயிற்சிகளுக்கும் வாய்ப்பளிக்கிறது என தெரிவித்தார்.

இப் பாடநெறிகளுக்கு பதிவு செய்யவேண்டிய முடிவுத்திகதி இம்மாதம் 31 ஆம் திகதியாக காணப்பட்டது. ஆயினும் தற்போது பலரின் வேண்டுகோளுக்கிணங்க முடிவுத்திகதி ஒரு மாதத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது எனவும், பதிவு செய்ய விரும்புபவர்கள் தமது விண்ணப்ப படிவங்களை நவம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

விண்ணப்ப படிவங்களை பட்டப்பின் கற்கைப்பிரிவில் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் www.slida.lk என்ற முகவரியிலும் சென்று தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

By

Related Post