Breaking
Sat. Jan 11th, 2025

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

கொள்கைகளைக் கைவிட்டுவிட்ட இன்றைய ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட மாற்றத்தையும் கொண்டுவந்து விடமுடியாது. தேர்தல் என்பது ஒரு நாடகம்.முதலாளித்துவத்தையும் தாராளமயமாக்கலையும் நிராகரித்துவிட்டு எந்தவொரு ஆட்சியாளராலும் இன்று அரசியல் கட்சி நடத்தமுடியாது என்பதை வைத்தே இதனைப் புரிந்துகொண்டு விடமுடியும்.

எந்தவொரு அடிப்படை மாற்றத்தையும் தேர்தல்கள் மூலம் கொண்டுவந்துவிடமுடியாது என்பதை நாம் உணரத்தான் வேண்டும். பிரெஞ்சுப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, சீனப் புரட்சி தொடங்கி சமீபத்தில் அரபுலக நாடுகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் வரை அனைத்துமே ஜனநாயகத்தை மீறி, ஜனநாயகத்தைக் கடந்து நடைபெற்ற பெரும் மாற்றங்கள் என்பதையும் நாம் இத்துடன் கவனிக்கவேண்டும்.

ஒரு சடங்கு போல் தேர்தல்களும் பிரசாரங்களும் கொள்கை அறிவிப்புகளும் வாக்குறுதிகளும் ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இதையே நாம் ஜனநாயகம் என்று அழைத்து வருகிறோம். மற்ற எல்லா வடிவங்களைக் காட்டிலும் இதுவே மேலானது என்றும் சொல்லிவருகிறோம். ஆட்சி மாற்றமே ஒரு பாவனைதான் என்றபோதும், இந்தப் பாவனையை, அப்போதுதான் பூத்த ஒரு புதிய அதிசயத்தைப் போல் ஒவ்வொரு முறையும் தரிசித்து வருகிறோம். முனைப்புடன் ஓட்டுக் கணக்கை ஆராய்கிறோம். யாருடன் யார் கூட்டு சேர்வார்கள் என்று ஆலோசிக்கிறோம். விவாதம் என்னும் பெயரில் முந்தைய ஆட்சியின் தோல்விகளையும் புதிய ஆட்சியின் வெற்றிகளையும் அலசுகிறோம். நம்முடைய அத்தனை செயல்களையும் தாற்காலிகமாக ஒதுக்கிவைத்துவிட்டு, கொஞ்சம் கனவு காண்கிறோம். மொத்தத்தில், ஆட்சி மாற்றத்தை, நம் வாழ்வை மாற்றியமைக்கப்போகும் ஒரு முக்கிய நிகழ்வாக எடுத்துக்கொள்கிறோம்.

ஆனால், இன்றைய உலகமயமாக்கல் சூழலில், தேர்தல்களும் தேர்தல் வெற்றி, தோல்விகளும் ஆட்சிமாற்றங்களும் நம் வாழ்வோடு சற்றும் தொடர்பில்லாத நிகழ்வுகள் என்பதே உண்மை. ஆட்சி என்பதன் பொருளும் நிர்வாகம் என்பதன் பொருளும் இன்று வெகுமாக மாறிவிட்டது. இலங்கை எப்படி ஆளப்படவேண்டும் என்பதை ஆளுங்கட்சியால் மட்டுமே நிர்ணயம் செய்யமுடியாது. இலங்கை ஏற்ற கொள்கை என்ன என்பதை இலங்கை நாடாளுமன்றம் மட்டும் முடிவு செய்வதில்லை. நாடாளுமன்றம், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் போன்ற நிறுவனங்களைக் கடந்து, நுட்பமான பல வலைப்பின்னல்களால் இன்றைய அரசியல் தளம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், அரசியல் அதிகாரம் என்பது இலங்கைக்கு வெளியிலும் பரவியிருக்கிறது என்பதே உண்மை. குறிப்பாக, சந்தைப் பொருளாதாரத்தைத் தழுவி நிற்கும் இன்றைய காலகட்டத்தில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலையீட்டைத் தவிர்த்துவிட்டு எந்தவொரு மாற்றத்தையும் எந்தவொரு ஆட்சியாளரும் கொண்டுவந்துவிடமுடியாது.

இத்தனையும் தெரிந்தும் ஊடகங்கள் ஆட்சி மாற்றத்தை ஊதிப்பெரிதாக்கி நமக்குத் தின்னக் கொடுப்பதற்குக் காரணம் இந்தச் செய்திகள் சுடச்சுட விலை போகும் பண்டம் என்பதுதான். முஸ்லிம் காங்கிரஸ் தலைமையை அற்புதங்கள் நிகழ்த்தும் ஒரு மந்திரவாதியாக ஊதிப் பெரிதாக்கியே அதே ஊடகங்கள் இன்று ஹக்கீமின் மாஜிக் வேலை செய்யவில்லை என்று எக்காளமிடுகின்றன. நாம் அதையும் கேட்கிறோம், இதையும் கேட்கிறோம். இனிவரும் காலங்களிலும், இன்னும் பல விரிவான அங்கலாய்ப்புகளை தேர்தல் அலசல்கள் என்னும் பெயரில் நாம் கேட்கவும் பார்க்கவும் வாசிக்கவும் வேண்டியிருக்கும்.
தேர்தல் மூலமாக ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் ஜனநாயக அரசியல் முறை அறிமுகமான புதிதில் இப்படிப்பட்ட மாற்றங்கள் சாத்தியமாயின. ஒரு கட்சி புதிததாக ஆட்சியைப் பிடிக்கும்போது, முந்தைய கட்சி கடைபிடித்து வந்த கொள்கைகள் திருத்தப்பட்டு, புதிய கொள்கைகள் அமலாக்கப்பட்டன. புதிய ஆட்சி முறை பிரகடனப்படுத்தப்பட்டது. தொழில்துறை, அயல்நாட்டுத் தொடர்பு, பொருளாதாரம், கல்வி, மக்கள் நலப்பணிகள், அரசியல் கொள்கைகள் என்று அனைத்து துறைகளிலும் மாற்றத்தின் தாக்கம் உணரப்பட்டது.

ஒரு காலத்தில் ஆட்சி மாற்றம், அடிப்படை கொள்கை மாற்றங்களைக் கொண்டுவருவதாக இருந்தது. போரையும் காலனியாதிக்கத்தையும் உயர்த்திப் பிடித்து வந்த வின்ஸ்டன் சர்ச்சிலைத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கிளமெண்ட் ஆட்லி 1945ல் தோற்கடித்தபோது, மாற்றத்தின் தாக்கம் பிரிட்டனிலும் அதன் காலனி நாடுகளிலும் உணரப்பட்டது. 1951 வரை ஆட்சியில் இருந்த ஆட்லி, பிரிட்டனின் பெரும் தொழிற்சாலைகளை அரசுடைமையாக்குவதில் முனைப்பு காட்டினார். மருத்துவம் உள்ளிட்ட பொது மக்கள் சேவைகளில் அரசின் பங்களிப்பை அதிகரிக்கச் செய்தார். 1948ல் ஆட்சி அதிகாரம் இலங்கை யிடம் திருப்பியளிக்கப்பட்டது. 1979ல் மற்றொரு ஆட்சி மாற்றத்தின் மூலம் மார்கரெட் தாட்சர் பதவியேற்றபோது, முதலாளித்துவமும் தனியார்மயமும் ஆட்சி செய்ய ஆரம்பித்தன. அரசுத் துறைகள் தனியார்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன. தொழிற்சங்கங்களின் பலம் வெகுவாகக் குறைக்கப்பட்டது. போரும் வேலையில்லாத் திண்டாட்டமும் பொருளாதார வீழ்ச்சியும் பிரிட்டனை நிரந்தரமாக ஆட்டிப் படைக்க ஆரம்பித்தது.

இன்று சூழல் அடியோடு மாறிவிட்டது. ஆட்சி மாற்றத்துக்கும் கொள்கை மாற்றத்துக்கும் அடிப்படை மாற்றங்களுக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதில்லை. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இலங்கை என்று ஜனநாயகத்தை வெவ்வேறு வடிவங்களில் பின்பற்றி வரும் அத்தனை நாடுகளுக்கும் இது பொருந்தும். இதன் பொருள் ஆட்சி மாற்றம் ஒரு வெற்று சடங்காக சுருங்கிவிட்டது என்பதுதான்.

Related Post