இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்திற்குள் கடந்த சில வருடங்களாக முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாத கொள்கைகளை பிரச்சாரம் செய்து வருவதாக பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மனநிலையுடன் முஸ்லிம் மக்களை குறிப்பாக முஸ்லிம் இளைஞர், யுவதிகளை இலக்காக கொண்டு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தானத்திற்குள் முஸ்லிம் அடிப்படைவாதிகள் வஹாப் வாதத்தை பரப்பி வருவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த வித்தானகே ஜனாதிபதிக்கு நேற்று -11- கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து உதவி பெறும் இஸ்லாமிய அமைப்புகள் இந்த பிரசாரத்தின் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருவதுடன் பெண்ணொருவர் இதில் முன்னோடியாக இருந்து செயற்பட்டு வருகிறார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த ஹட்சன் சமரசிங்கவை அச்சுறுத்தி, பீதிக்கு உள்ளாக்கி இவர்கள் தமது அடிப்படைவாத நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்பினர்.
தற்போது நிலைமை மேலும் அதிகரித்துள்ளதுடன் இந்த பிரசாரங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால், திறந்த மனத்துடன் சுதந்திரமாக செயற்பட்டு வரும் முஸ்லிம்கள் வஹாப் வாதத்தின் பிடிக்குள் சிக்குவார்கள் எனவும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் போன்ற இந்த நடவடிக்கையை தடுப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறிவிடும் எனவும் டிலந்த வித்தாகே தனது கடிதத்தி்ல் கூறியுள்ளார்.
மேலும் முஸ்லிம் அல்லாத பெரும்பாலானவர்களின் வரிப் பணத்தில் இயங்கும் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபனத்தை இவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை பிரசாரம் செய்யும் அலைவரிசையாக பயன்படுத்தி வருவது குறித்து மிகவும் கவலையடைவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். jm