ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் குறித்த நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜெனிவா மனித உரிமை பேரவையில் வெளியிடப்படவுள்ளது.
இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஐக்கிய நாடுகள் விசாரணை அறிக்கையை ஐகிகிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் வெளியிடவுள்ளார்.
இந்த விசாரணை அறிக்கை சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன் படி ஐந்து நாள் கடந்து இன்று வௌ்ளிக்கிழமை அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை வெளியீடு தொடர்பில் நேற்று முன்தினம் ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் குறிப்பிடுகையில்
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணை அறிக்கையின் உள்ளடக்கமானது கடுமையான தன்மையுடனேயே காணப்படுகின்றது
அந்த பரந்துபட்ட விசாரணையின் அறிக்கையையும் பரிந்துரைகளையும் நாளை புதன்கிழமை இந்த பேரவையில் வெளியிடவுள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இலங்கையின் சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை பொறிமுறை ஒன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக கூறினார்.
2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இலங்கை தொடர்பான உள்ளக விசாரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் முன்னெடுத்தது.
அந்தவகையில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை செயற்பாடுகள் செயற்பாட்டு ரீதியாக ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 12 பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இந்த விசாரணைக் குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் மூன்று விசேட நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நல்லிணக்க ஆணைக்குழு கவனம் செலுத்திய காலப் பகுதியில் இலங்கையில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை அலுவலகம் விரிவான சுதந்திரமான விசாரணையை முன்னெடுத்தது.
அதற்கமைய 2014 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் அலுவலகத்தின் இலங்கை விவகாரம் குறித்த விசாரணை செயற்பாட்டு காலப்பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஜனவரி மாதம் ஆகும்போது விசாரணை அறிக்கை தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
ஐ.நா. மனித உரிமை அலுவலகம் இலங்கை குறித்த விசாரணையை முடித்திருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருந்தது. எனினும் இலங்கையின் ஆறுமாத கால நல்லாட்சி அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்போடப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் மனித உரிமை பேரவையின் தலைவருக்கு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இலங்கை குறித்த அறிக்கை செப்ம்டெம்பர் மாதத்துக்கு பிற்போடப்பட்டது.
ஆனால் செப்டெம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை அலுவலகத்தின் 30 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை கட்டாயம் சமர்ப்பிக்கப்படும் என கூறப்பட்டது. அதன் படி இன்றைய தினம் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.