Breaking
Wed. Nov 13th, 2024

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவை சிறார்கள் மூலம் வளர்ப்பது மேலும்  சிறந்தது என தான் கருதுவதாக இலங்கைக்கான சீனாவின் தூதுவர்(cheng xueyuan )செங் சியூயன் தெரிவித்தார்.

சீன தூதுவராலயத்தின் உதவியுடன் மன்னார் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு தாராபுரம் அல் மினார் வித்தியாலயத்தில் இன்று மாலை (06) இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட சீன தூதுவர்  பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில் (OHRD) ஓ .எச்.ஆர்.டி. நிறுவனத்தின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் கற்கும் சுமார் 1000 மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன .

சீனத்தூதுவர் இங்கு உரையாற்றிய போது கூறியதாவது,

மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்தமை எனக்கு மகிழ்ச்சி தருகின்றது. மாணவர்களும் சிறார்களுமே  ஒரு நாட்டினது  எதிர்கால தூண்கள் அந்த வகையில் மன்னார் மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த சிறிய உதவியானது வருங்காலத்தில் இந்த மாவட்டத்திற்கு பாரிய உதவிகளை நல்குவதற்கு வழிவகுக்கும் என நம்புகின்றேன். மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்காக பிரார்த்திக்கின்றேன் என்று தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு உரையாற்றிய போது,

சீன உதவியுடன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குவதற்காக மன்னாருக்கு வருகை தந்த சீன தூதுவருக்கும் சீன அரசாங்கத்திற்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் சார்பில்  எனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றேன்.

சீனாவும் இலங்கையும் மன்னர் ஆட்சிக்காலத்திலிருந்தே பலமான உறவை கொண்டது. 1957 ஆம் ஆண்டு பெப்ரவரியில் இலங்கை சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை தொடங்கியது. அதன் பின்னர் பரஸ்பரம் நாடுகளின் உறவுகள் மேலும் வலுவடைந்தன.

இலங்கைக்கு சீனா பாரிய உதவிகளையும் அபிவிருத்தித்திட்டங்களையும் வழங்கி வருகின்றது. துறைமுகம்  ,விமான அபிவிருத்தி, புகையிரதம் , வீதிகள் , பாலங்கள் என இந்த உதவிகள்  விரிவடைந்து வருகின்றன.  இந்த உதவிகள் மூலம் எமது நாடு சிறப்பான   பயன்களை பெறுகின்றது  என்றார்.

இந்த நிகழ்வில் சீன தூதரக அதிகாரிகள் , பாடசாலை அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள், சமூக நல இயக்கங்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Post