Breaking
Mon. Jan 13th, 2025

இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு சுவீடன் நம்பிக்கையுடன் காணப்படுவதாக சுவீடனின் பிரதமர் ஸ்டீவன் லொஃப்வென் (Stefan Löfven) தெரிவித்தார்.

சீனாவின் ஹய்னன் (Hainan) மாகாணத்தில் இடம்பெற்று வரும் ஆசிய வருடாந்த மாநாடு 2015 இற்கான ‘போஆஒ’ மன்றத்தில் (Boao Forum for Asia Annual Conference 2015) வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனேவை நேற்று (29) பிற்பகல் சந்தித்து இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு பிரதமர் லொஃப்வென் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டதோடு, தேர்தலுக்குப் பின்னரான இலங்கையில் ஏற்பட்டுள்ள நேர்முகமான அபிவிருத்திகளைக் கண்டு சுவீடன் அரசாங்கம் திருப்தியடைவதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால விளக்கமளித்தார். ‘இலங்கைக்கு வரும் சுவீடன் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதற்கு நாங்கள் நடவடிக்கைகளை எடுப்போம்,’ என பிரதமர் தெரிவித்தார்.

இலங்கையுடன் காணப்படும் பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு சுவீடன் ஆர்வத்துடன்’ காணப்படுவதாக சுவீடனின் பிரதமர் ஸ்டீவன் லொஃப்வென் தெரிவித்ததோடு, முன்பிருந்ததைவிட இந்த உறவுகள் பலமானதாகக் காணப்படும் எனவும் தெரிவித்தார்.

விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்கு நீர்ப்பாசனத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு சுவீடனின் உதவியை ஜனாதிபதி கோரினார். இந்தக் கோரிக்கைக்கு சுவீடன் பிரதமர் சாதகமான முறையில் பதிலளித்தார்.

Related Post