இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தற்போது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் நம் பகத்தன்மை மீது இலங்கை அரசால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் யயிட் அல் ஹுஸைன் நேற்றைய தினம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்துடன், ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வரும் மனித உரிமைக்காப்பாளர்கள் மற்றும் தனிநபர்களை அச்சுறுத்தி அடிபணியவைக்கும் முயற்சிகளையும் அவர் கண்டித்துள்ளார்.
“”விசாரணைகள் தொடர்பில் பிழையானதும் திரிபுபடுத்தப்பட்டதுமான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வரு கின்றன. அத்தோடு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் ஆணை வழங்கப்பட்ட விசாரணைக்குழுவிற்கு சாட்சியங்களை வழங்குவோரை தடுப்பதற்கான நாசகார முயற்சிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன” எனவும் ஐ.நா. ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
பேரவையால் ஆணைவழங்கப்பட்ட விசாரணைக் குழுவிற்கு சாட்சியங்களை வழங்குவோரை தடுப்பதற்கான நாசகார முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன” எனவும் ஐ.நா. ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- விசாரணை குறித்து தொடரும் திரிபு படுத்தல்கள் மற்றும் பிழையான தகவல்களை வழங்குதலும், பாதிக்கப் பட்டவர்கள் ஐக்கிய நாடுகள் விசாரணைக்குழுவுக்கு தகவல்களை வழங்க முன்வருவதை தடுத்தலும் ஐ.நாவை அவமரியாதை செய்யும் நடவடிக்கையாகும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு மிகத் தெளிவான விதத்தில் இலங்கையை விசார ணைகளுக்கு ஒத்துழைக்குமாறு கோரியுள்ள போதிலும், இலங்கை அரசு அதனை வெளிப்படையாக மறுத்து வருகின்றது.
இலங்கை அரசு இவ்வாறு விசாரணைகளுக்கு ஓத்துழைக்க மறுத்து வருவது – ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையால் ஆணை வழங்கப்பட்ட விசாரணையின் நேர்மைத் தன்மைக்குப் பாதிப்பை ஏற்படுத் தவில்லை. மாறாக இலங்கை அரசின் நேர்மை குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.
மறைப்பதற்கு எதுவுமில்லாத அரசுகள் ஏன் சுயாதீன விசாரணையயான்றை சீர்குலைப்பதற்கான சதிமுயற்சிகளில் இவ்வளவு தூரம் ஈடுபடவேண்டும்.
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கு சாட்சியங்களைச் சமர்ப்பிக்க முனையும் தனி நபர்களை மிரட்டுவ தும் – தடுப்பதும்,ஐ.நா சாசனத்தை பின்பற்றுவதாக உறுதியளித்துள்ள உறுப்பு நாடுகள் எதுவும் செய்யக்கூடிய ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கையல்ல.
மோதலில் ஈடுபட்ட இரு தரப்பும் மிகக்கடுமையான சர்வதேச குற்றங்களில் ஈடுபட்டனர் என்ற பரந்துபட்ட, தொடர்ச்சியான, வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் 2009 முதல் இலங்கை சர்வதே விசாரணையைத் தடுத்துவருகின்றது.
இலங்கையில் சிவில் சமூகத்தினரும் மனித உரிமை பாதுகாவலர்களும் தொடர்ச்சியாக கண்காணிக் கப்படுதல், அச்சுறுத்தப்படுதல், துன்புறுத்தப்படுதல் போன்றவற்றுக்கு உட்படுத்தப்படுகின்றனர். இலங்கை அரசு பயம் என்ற பாரிய சுவரைக் கட்டி எழுப்பி உள்ளது. இது பொதுமக்கள் ஆதாரங்களை சமர்ப்பிப்பதைத் தடுத்து வருகிறது.
மேலும், ஐ.நா. விசாரணை பக்கச் சார்பானது, தொழில்சார் தன்மையற்றது என்ற குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம்.
ஐ.நாவானது மக்கள் நிரப்புவதற்காக எந்த வகையான படிவத்தையும் வழங்கவில்லை. தன்னுடைய சார்பில் எந்தவொரு தனி அமைப்பையும் ஆதாரங்களைத் திரட்டுமாறு கோரவில்லை.
ஆதாரங்களை வழங்குவதற்காக ஐ.நா. பணம் எதனையும் வழங்கவு மில்லை. விசாரணை நடைபெறும் முறையும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாங்கள் மேற்கொள்ளும் விசாரணைகள் குறித்தோ அல்லது எங்கு, எப்போது, நடந்தது என்பது குறித்தோ தகவல்களை வெளியிடமாட்டோம். தகவல்களை வழங்கு வோரைப் பாதுகாப்தற்காக பின்பற்றப்படும் வழமையான நடவடிக்கை இது – என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.