Breaking
Mon. Dec 23rd, 2024
Indian Muslims offer last Friday pray of the holy month of Ramadan, in Kolkata, India, Friday, Aug. 2, 2013. Muslims throughout the world are marking the month of Ramadan, the holiest month in Islamic calendar during which devotees fast from dawn till dusk. (AP Photo/Bikas Das)
“அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் நதேயா கருத்து தெரிவித்திருப்பதும், இலங்கை முஸ்லிம்களின் பேராதரவில் ஆட்சியமைத்த நல்லாட்சி அரசாங்கம் ஜி எஸ் பி ப்ளஸ்சை மீண்டும் இலங்கைக்கு பெற்றுத்தர இஸ்லாமிய திருமணச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்துவதும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.” என்று அமைச்சர் ரிஷாத் பதியுத்தீனின் பதுளை மாவட்ட இணைப்பாளரும் , மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவருமான  ஏ எம் எம் முஸம்மில் தெரிவித்தார். பதுளை கிரீன் மவுன்ட் ஹோட்டலில் “ இலக்கை நோக்கிய நகர்வில் பதுளை முஸ்லிம்கள் ” என்ற தொனிப்பொருளில் நடை பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் மேற்படி கருத்தை தெரிவித்தார்.
 இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அதிபர் முஸம்மில் அவர்கள் ,” ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் நதேயா மேற்படி கருத்தைக் கூறி இரண்டு நாட்களுக்குப் பின் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர இந்த கருத்தை அடியொட்டி அரசாங்கத்தின் நிலைபாட்டை உத்தியோகப்பூர்வமாக்குகின்றார்.
உண்மையில் கடந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்க  காலத்தில் தொடர்ச்சியாக  நடந்த மனித உரிமை மீறல்கள் , சிறும்பான்மை சமூக சமயங்களுக்கான  நெருக்குதல்கள்  போன்ற விடயங்களுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் ஜி எஸ் பி பளஸ் சலுகையை இடை நிறுத்தியது. ஆனால் முஸ்லிம்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் தனியான விவாக விவாகரத்து சட்டத்தின் மூலம் பெண்களின் உரிமை பாதிக்கப் படுவதாக கூறி இந்தச் சட்டத்தை மாற்றியமைத்தால் அல்லது திருத்தி அமைத்தால் குறிப்பிட்ட    ஜி எஸ் பி பளஸ் சலுகையை மீண்டும் இலங்கைக்கு பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுவதாக கூறுவது முஸ்லிம்களால் தான் இந்தச் சலுகை இல்லாமல் ஆக்கப் பட்டுள்ளது எனும் தோரணை உருவாக்கப் பட்டுள்ளது.  முஸ்லிம்களின் தனித்துவமான மத கலாசார உரிமைகளை இலக்கு வைத்து கடந்த காலங்களில் பகிரங்கமாக எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் நாடங்கிலும் நடத்தப் பட்டன. இதன் பின்னணியில் யூத சியோனிச சக்திகள் செயற்பட்டன. நல்லாட்சியில் இன்று அந்த சக்திகளின் செயற்பாடுகள் வெற்றியளிக்க துவங்கியுள்ளது. இலங்கை இனப் பிரச்சினை தீர்வில் ஐரோப்பிய ஆதிக்கம் இவ்வாறு செயற்படுகையில் இந்தியாவின் பிராந்திய ஆதிக்கமும் மிகத்தீவிரமாக இவ்விடயத்தில் செயற்படுவதையும் குறிப்பிட வேண்டும்.
 இனப் பிரச்சினைக்கான தீர்வுகளில் சர்வதேச , பிராந்திய அரசியல் செல்வாக்குகள் முக்கியமான  தீர்வு புள்ளிகளாக செயற்படுகின்றன. இதில் இந்தியாவின் செல்வாக்கு இன்றியமையாததாக உள்ளது. ஜனாதிபதி மைத்ரி அவர்கள் தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்  முதலாவது வெளிநாட்டு விஜயத்தை இந்தியாவுக்கே மேற்கொண்டார் என்பதும் , அதைத் தொடர்ந்து  இதுவரைக்கும் மூன்று முறை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். வட கிழக்கை மையப் படுத்தியே தீர்வு திட்டம் வரையப் படும் என்பதும் நிதர்சனமானதகும். புலிகளால் விரட்டப் பட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு, அகதிகளாக்கப் பட்ட  முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கமும் , தமிழ் தேசிய கூட்டமைப்பும் எந்தவித கரிசனையுமில்லாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயில் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றினை அல்லாமல் முஸ்லிம்கள் மீது திணிக்கப் படும் தீர்வொன்றினை முன்வைக்கப் படும் செயல்பாடுகள் திரைமறைவில் செயட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த  இலக்கை அடைந்து கொள்ளும் அரசியல் பின்னணியை உருவாக்கும் நோக்கில் இந்துத்துவா தீவிரவாத அமைப்பான சிவ சேனாவை இலங்கைக்கு இறக்குமதி செய்திருக்கலாம். காரணம் இதன் கர்த்தாவாக செயற்படக் கூடிய வவுனியாவை சேர்ந்த, இந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரான  மறவன்புலவு சச்சிதானந்தனுடன் கைகோர்த்து செயற்படும்   தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதன் தீவிர தொண்டராக செயற்படுகின்றார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் வை. யோகேஸ்வரன் சிவசேனாவுக்காக வவுனியாவில் ஒரு காரியாலயத்தையும் 2016/௦9/09 ந் திகதி திறந்து வைத்துள்ளார்.. வடகிழக்கில் மட்டுமல்லாது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இனிமேல் இந்து முஸ்லிம் கலவரங்கள் ஏற்பட தேவையான பின்னணியை இந்த சிவ சேனா கட்சிதமாக மேற்கொள்ளும். குறிப்பாக வடகிழக்கில் இவ்வாரானதொரு சூழலை ஏற்படுத்துவதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் இலகுவாக இணைத்துவிட முடியும் என்ற சிந்தனையை ஏற்படுத்த இவர்கள் முற்படுவார்கள்.
இது இவ்வாறு இருக்க, ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் நதேயா இலங்கை இஸ்லாமிய திருமண சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும் எனக்கூறும் அதே நேரத்தில் இந்தியாவின் ஆளும் ஆர் எஸ் எஸ் சார்பு அரசாங்கமும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் என்றும் இஸ்லாமிய பெண்கள் இஸ்லாமிய தனியார் திருமணச் சட்டங்களால் கொடுமைபடுத்தப் படுவதாக மேடைபோட்டு கூவத் தொடங்கியுள்ளார்கள் . இந்த நிகழ்வுகள் குறிப்பிட்டதொரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் நிகழ்வதாக அனுமானிக்க முடிகின்றது.
         இதன் தொடர் நிகழ்வாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவும் இஸ்லாமிய திருமண சட்டங்களில் மாற்றம் கொண்டுவர ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.  வெளியிடப் பட்ட இந்த அறிக்கையானது  கடந்த கால இனவாத ஆட்சியின் போது குனூத் ஓதுவதை நிறுத்தக் கோரி வெளியிட்ட அறிக்கையை நினைவு படுத்துகின்றது. அதாவது ஜம்மியத்துல் உலமா மீண்டும் ஒரு அரசியல் பொறிக்குள் அகப்பட்டுள்ளதாக , எண்ணவைக்கின்றது. இஸ்லாமிய தனியார் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப் படவேண்டியது ஏற்றுக்கொள்ளப் படவேண்டிய விடயமென்றாலும்  அதற்கான தருணம் இதுவல்ல. அதாவது  ஐ நாவின் சிறும்பான்மை சமூகங்கள் சம்பந்தமான அறிக்கையாளர் ரீடா ஐசக் நதேயா இது சம்பந்தமாக வலியுறுத்தும் தருணத்தில் , அதை இலங்கை அரசாங்க வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கொள்கையளவில் ஏற்று ஊடகங்களில் கருத்து கூறும் வேளையில் இந்தியாவும் சேர்ந்து ஒத்துப் பாடும் போது தான் ஜம்மியத்துல் உலமாவுக்கும் இந்த ஞானம் பிறந்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.
மேலும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற் கெதிராக இத்தகைய நெருக்குதல்கள் கெடுபிடிகள் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் ஏக காலத்தில் , பாலஸ்தீன விடயத்தில்  மிக நீண்ட காலமாக பின்பற்றி வந்த வெளியுறவு கொள்கையை திடீரென தலைகீழாக மாற்றி கடந்த ஓகஸ்ட் 13ம் திகதி யுனெஸ்கோவின் பாலஸ்தீன ஆதரவான பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொண்டது இலங்கை அரசு. பாலஸ்தீன குதுஸ் அல் அக்சா பள்ளிவாசல் முஸ்லிம்களின் பூர்வீக பூமி என்பதற்கான  தெளிவான ஆதாரங்களை முன்வைத்து, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் உடனடியாக இப்பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற பிரேரணையை   ஐ நாவின் 140 அங்கத்துவ  நாடுகள் ஆதரித்து (வத்திக்கான் உட்பட) வாக்களிக்கும் போது இலங்கை ஒதுங்கிக் கொண்டதானது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்சொன்ன அநீதி அநியாயங்களை உரிய இடத்தில் தட்டி கேட்கவும் ,நியாயத்தை நிலைநாட்டவும் எமக்கிருக்கும் ஒரே ஊடகம் எமது அரசியல் பிரதிநிதித்துவமாகும். ஆனால் இலங்கையில் தற்போது யாப்பு மாற்றத்திற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதேவளை தேர்தல் முறை மாற்றத்திற்கான எல்லைகளை மீள் நிர்ணயம் செய்வதற்கான இறுதி கட்ட விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எமது பிரதிநிதித்துவங்களை வெகுவாக குறைப்பதற்கான சூழ்ச்சிகள் இதன் பின்னணியில் நடைபெறுகின்றன. இவை சம்பந்தமாக போதிய அவதானத்தை எமது சாமூக தலைமைகள் பள்ளிவாயில்கள் சிவில் அமைப்புக்கள் இன்னும் பெறவில்லை.
கடந்த காலங்களில் மலையக முஸ்லிம் கவுன்சில் இந்த விடயங்களில் முனைப்புடன் செயற்பட்டு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் பலனாக எல்லை மீள் நிர்ணய ஆலோசனைக்குழு மற்றும் யாப்புமாற்ற ஆலோசனைக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளை நேரடியாக சந்தித்து எமது ஆலோசநிகளை முன்வைத்துள்ளோம். எதிர்காலத்துளும் இந்தவிடயங்களில் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உங்கள் அனைவரினதும் மேலான ஒத்துழைப்புகளை வேண்டி நிற்கின்றோம். “   என்றும் கூறினார்

By

Related Post