2014ம் ஆண்டின் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் என்ற அடிப்படையில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது.
இதில் அளுத்கம சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாக முஸ்லிம் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ளாதபடி ஊடகங்கள் அவற்றை வெளிக்காட்டாமல் தடுக்கப்பட்டன.
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்துக்கள் யாவும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த அமைப்பினர் கையிலெடுத்து செயற்படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தவிர ஒரு இடத்தில் முஸ்லிம் மாணவி ஒருவரின் தாயை இஸ்லாமிய உடையுடன் வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் ஒன்று தடுத்தமையானது, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டும் செயல்களில் ஒன்றாகும் என்று முஸ்லிம் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.