இலங்கை முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டின் ஐக்கியத்தை சீர்குலைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. அவர்கள் நாட்டை ஐக்கியப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களையே முன்னெடுத்தனர் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் பங்குகொண்டுள்ளீர்கள். உங்கள் முன்னிலையில் நான் ஒரு உத்தரவாதம் வழங்குகிறேன்.
இலங்கையில் இனவாதத்துக்கு இடமில்லை.
இலங்கை இனவாதத்தை எதிர்க்கிறது. இனி ஒருபோதும் இலங்கையில் இனவாதத்துக்கு இடமளிக்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதியளித்தார். நேற்றுக் காலை அலரி மாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக முஸ்லிம் லீக்கின் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இம்மாநாடு முக்கியமான கால கட்டத்தில் நடைபெறுகிறது. இஸ்லாம் ஒரு முக்கிய மார்க்கமாகும். இஸ்லாம் சகவாழ்வுக்கும், நல்லிணக்கத்துக்கும் வழிகாட்டியுள்ளது
. இயேசு பிறந்து 600 வருடங்களுக்குப் பின்பே முஹம்மது நபி (ஸல்) பிறந்துள்ளார். இறைத்தூதர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்தவே முனைந்தார்கள். அனைத்து சமயங்களும் சகவாழ்வையே வலியுறுத்தியுள்ளன.
இந்த நூற்றாண்டில் அவ்வப்போது சில இடங்களில் இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு தீவிரவாதம் தோற்றமுறுகிறது. இலங்கையிலும் தீவிரவாத பிரச்சினையை நாம் எதிர்கொண்டுள்ளோம். சமூக வலைத்தளங்கள் இப்பிரச்சினையை பரிமாறிக்கொள்வதால் சமூகங்களுக்கிடையிலான நல்லுறவில் விரிசல் ஏற்படுகிறது.
முஸ்லிம்களில் சிறிய ஒரு குழுவினரே தீவிரவாத செயற்பாடுகளில் மற்றும் ஆயுதப் போராட்டங்களில் நாட்டம் கொண்டுள்ளனர். தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் அணுகுமுறையாகவே அதனை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
என்றாலும் ஆயுதம் ஏந்துவது தமது பாதுகாப்புக்கான தீர்வாக அமையாது. பிணக்குகள் ஏற்படுகின்ற போது அதனை புரிந்துணர்வு மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
முதலாம் உலகப் போரின் பின்பு இங்கிலாந்தும் பிரான்ஸும் இரு வேறுபட்ட கோட்பாடுகளைக் கொண்டிருந்தன. அந்த கோட்பாடுகள் முஸ்லிம் உலகின் உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் பிளவுகள் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தன. அதனால் சர்வதேசத்தினால் மத்திய கிழக்கு நாடுகள் சமத்துவமாக நடத்தப்படுவதில்லை என்ற சந்தேகம் மத்திய கிழக்கு நாட்டு மக்களிடம் ஏற்பட்டன.
அத்தோடு ஏனைய நாட்டு முஸ்லிம்கள் மத்தியிலும் அவ்வாறானதொரு சந்தேகம் இருக்கலாம். இந்தச் சந்தேகம் ஒருவேளை சரியாகவும் இருக்கலாம் அல்லது பிழையாகவும் இருக்கலாம். இந்தச் சந்தேகங்கள் நீக்கப்பட்டு சக வாழ்வுக்கான நிலைமைகள் உருவாக்கப்பட வேண்டும்.
பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு சகவாழ்வை ஏற்படுத்துவதற்கு கலந்துரையாடல்களை மேற்கொண்டு புரிந்துணர்வை ஏற்படுத்தலாம். அல்லது சமூகவியல் சார்ந்த விடயங்கள் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி தீர்வு காணலாம்.
ஆகவே இவ்வாறான பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணமுடியாது. அது நீண்ட காலத்திட்டங்களை வகுத்து செயற்படுவதன் மூலமே சாத்தியமாகும்.
நல்லிணக்கப் பொறிமுறையில் சகலரும் திறந்த மனதுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் மூலமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும் சமயத் தலைவர்கள் நல்லிணக்கத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும். சகல நாடுகளிலும் சமயத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு சகவாழ்வை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். கிறிஸ்தவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். என்றாலும் சகல சமூகங்களும் ஒருமைப்பாட்டுக்கான விடயங்களில் முன்னின்று செயற்படுகின்றனர்.
இலங்கை மக்கள் அனைவரும் இன, மத வேறுபாடுகளை மறந்து தேசிய ஐக்கியத்துக்கும் நல்லிணக்கத்திற்கும் வாக்களித்துள்ளனர். பொது அபேட்சகராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பெரும்பான்மை கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கமொன்றினை அமைத்துள்ளமை நல்லிணக்கத்துக்கு பலமாக உள்ளது. இலங்கையைப் பொறுத்த மட்டில் மதங்களுக்கிடையில் பெரியளவிலான பிரச்சினைகள் இல்லை அவ்வப்போது உள்ளக ரீதியிலான சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. அவ்வாறான சம்பவங்கள் ஒரே சமூகத்திற்குள் நடைபெறுகின்றமை வழமை.
இலங்கையில் பெரும்பாலான முஸ்லிம்கள் சிங்களவர்களின் வெசாக் பண்டிகையில் கலந்து கொள்கின்றார்கள். இதேபோல் முஸ்லிம்களின் இப்தார் வைபவங்களில் பெரும்பாலான சிங்களவர்கள் கலந்துகொள்கிறார்கள். முஸ்லிம்களின் இப்தார் நிகழ்வுகளை பௌத்த, இந்து, கிறிஸ்தவ மக்களும் ஏற்பாடு செய்கின்றனர்.
இது இலங்கையில் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளை உறுதிப்படுத்துகிறது. அனைத்து சமூகத்தினருக்கும் தனித்துவமான அடையாளங்கள் உள்ளன. இந்த அடையாளங்களைப் பேணும் அதே வேளை இலங்கையர் என்ற அடையாளத்திலும் உறுதியாக இருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் நாம் தற்போது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஒன்றிணைந்துள்ளோம். அதைப் போல் நாட்டு மக்களும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் தலைமையில் நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதியும் நல்லிணக்க செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பரில் இலங்கையில் செயலமர்வொன்று நடைபெறவுள்ளது. அதன் பிரதான தொனிப்பொருள் மதங்களின் பார்வையில் ஜனநாயகம் என்பதாகும் அச்செயலமர்வில் தெற்காசிய மற்றும் தென் கிழக்காசிய நாடுகளின் மதங்களின் பார்வையிலான ஜனநாயகம் நோக்கப்படவுள்ளன. அதில் ‘இஸ்லாமும் ஜனநாயகமும்’ என்ற தலைப்பிலே முதல் அமர்வு நடைபெறவுள்ளது என்றார்.
நிகழ்வில் உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லா பின் அல்முஹ்ஸின் அல்துர்க்கி, முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி, இஸ்லாமிய நிலையத்தின் தலைவரும் முன்னாள் சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதருமான ஹுசைன் முஹம்மத் ஆகியோரும் உரையாற்றினர்.
உலக முஸ்லிம் லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி அப்துல்லாபின் முஹ்ஸின் அல்துர்க்கி பிரதமருக்கு நினைவுச் சின்னம் வழங்கினார். ஏனைய அதிதிகளுக்கும் நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டன.