Breaking
Mon. Dec 23rd, 2024

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மார்கோட் வொல்ட்ஸ்ரோம் யாழ். குடாநாட்டிற்கும் செல்லவுள்ளார்.சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து சுவிஸ் அமைச்சர் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மறவன்புலோவில் சுவிஸ் நாட்டின் நிதியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தை பார்வையிடுவதற்காக சுவிஸ் அமைச்சர் எதிர்வரும் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அங்கு செல்லவுள்ளார்.அவரது யாழ்ப்பாண விஜயத்தின்போது வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு யாழ். மாவட்ட அரசாங்க அதிபரையும் சந்திக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள சுவிஸ் அமைச்சர் சபாபதிப்பிள்ளை முகாமுக்கும் விஜயம்செய்து, அங்கு முகாம்களிலுள்ள இடம்பெயர்ந்து வாழும் மக்களையும் சந்திக்கவுள்ளார்.

முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனையும் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக  வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

By

Related Post