ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், செப்ரெம்பர் மாதம் 1ஆம் நாள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு இறுதியுடன், ஐ.நா பொதுச்செயலர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ள நிலையில், பான் கீ மூன் சிறிலங்காவுக்கான இரண்டாவது பயணத்தை, அடுத்த மாதம் மேற்கொள்ளவிருக்கிறார்.
செப்ரெம்பர் 3ஆம் நாள் வரை அவர் சிறிலங்காவில் தங்கியிருப்பார். இதன் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் அரசாங்க பிரதிநிதிகள் பலரையும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஐ.நா மற்றும் அனைத்துலக தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப்படுவதில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்கள் என்பனவற்றில் அவர் கவனம் செலுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.