அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கை விவகாரத்தில் அதீத அக்கறை செலுத்துவதாக தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர், இலங்கையில் தற்போதுவரையில் நல்லிணக்கம் முழுமையாக கட்டியெழுப்பப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சமந்தா பவர் மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள நிலையில் அவரது விஜயத்தின் இறுதி தினமான நேற்று இலங்கையின் எதிர்காலத்தின் தூண்களாக காணப்படும் இளைஞ சமுதாயத்தினருடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
கொழும்பில் ஒருமணி நேரமாக இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் துறைசார் கற்கைநெறிகளை தொடரும் மாகணவர்கள், சிவில் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியவற்றில் அங்கம் வகிக்கும் இளைஞர் யுவதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போதே ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் தற்போது இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றேன். 2010ஆம் ஆண்டு வருகை தந்திருந்தேன். தற்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்திருந்தேன். எல்லே விளையாட்டு வீராங்கனையாக வரவேண்டுமென்பது எனது கனவு. யாழில் பாடசாலை மாணவர்களுடன் எல்லே விளையாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியாகவுள்ளது.
ஜனவரி எட்டாம் திகதி புதிய ஆட்சி ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம், பொறுப்புக்கூறுதல் ஆகியவற்றில் புதிய அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளதோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்காவும் கூறியுள்ளது. தற்போது வரையில் இந்த நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகள் முழுமையடையவில்லை. ஆனால் அதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நாட்டின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதில் உங்களுடைய (இளைஞர்கள்) பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். கடந்த கால நிலைமைகளிலிருந்து விடுபட்டு நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு , அடைப்படை உரிமைகளுடன் சுதந்திரமாக நிரந்தரமான சமாதனம் உருவாக்கப்படவேண்டும்.
அதன் மூலம் நாட்டினதும் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் எதிர்காலம் சிறப்பானதாக அமையும். அதற்காக இளைஞர், யுவதிகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த அடித்தளத்தை கட்டியெழுப்ப வேண்டும்.
தற்போது இலங்கைக்கு சிறந்த அரசியல் தலைவர்கள் கிடைத்துள்ளார்கள். இந்த நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தி அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை தீவு பல்லினங்களைக் கொண்டதாகும். அவ்வினங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானமான நிலைமையொன்று ஏற்படுவதையே நாம் விரும்புகின்றோம். அவர்கள் பிரிந்து நிற்பதை நாம் விரும்பவில்லை. இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்ட முப்பது ஆண்டுகால யுத்தத்தில் வெற்றியாளர்கள் யாருமில்லை. அனைவருமே இழப்புக்களைச் சந்தித்துள்ளார்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புதல், அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் போன்ற அனைத்து விடயங்களிலும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்குவதோடு ஆதரவளித்து துணைநிற்கும். அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஒவ்வொரு தினமும் இலங்கையில் என்ன நடக்கின்றது? பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் நிலைமை என்ன? நல்லிணக்க செயற்பாடுகள் எவ்வாறுள்ளன? காணிகள் விடுவிக்கப்படுகின்றனவா? மக்கள் என்ன நிலையில் உள்ளார்கள்? போன்ற கேள்விகளை எழுப்புவார். அதேபோன்ற பல்வேறு மனிதர்களும் இலங்கை தீவின் மீது கவனத்தைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களும் இவ்வாறான கேள்விகளையே கேட்கின்றார்கள். இவை அனைத்தும் எளிதில் நடைபெற்றுவிடாது. மெதுவாக நடைபெற்றாலும் அவை அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு இலங்கைத் தீவில் நிரந்த சமாதனம் ஏற்படுவதற்கு அனைவரும் ஒன்றுபட்டு குரல்கொடுப்பதுடன் இணைந்து செயற்படுவதற்கு கைகோர்க்க வேண்டுமென்றார்.