ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்
இக்கட்டுரை எழுதப்படுவதற்கான நோக்கம் நல்லாட்சி நிலவுகின்ற எம் நாட்டில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி பாலசிரிசேனவின் நல்லாட்சி பிழையாக விமர்சிக்கப்படக்கூடாது என்பதற்காகவும், இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றம் தொடர்பில் ஒரு உண்மை மறைக்கப்பட்டு பிழையான கருத்தாடல்கள் கல்குடா முஸ்லிம் பிரதேச மக்களிடம் விதைக்கப்பட்டு வருகின்றது. ஒரு உண்மையை மறைத்து விடாது, இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டு விடாது, மக்கள் மன்றத்திற்கு நடந்ததை நடந்ததாகக் கொண்டு சென்று மக்களை விழிப்பூட்டுவது ஊடகவியலாளர்களுடைய கடமையாகும். அந்த வகையிலும், நல்லாட்சி நிலவும் இந்த அரசாங்கத்தில் அரசாங்க அதிகாரிகள் கடமையை கடமையாக சுய நலனைக் கருத்திற் கொள்ளாது, மக்கள் நலனை கருதி செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் மக்களும், அரசாங்கமும் அவர்களுக்கு பூ மலை அணிவித்து வாழ்த்துக்கூறவும் மக்கள் மனங்களில் ஒரு இடத்தினைப் பெற்றுக்கொள்ளவும் ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகின்றேன்.
தனது கவனயீனம் காரணமாக தனது கடமையைச் சரியாகச் செய்யாத கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச முன்னாள் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஹனீபா அவர்களின் இடமாற்றம் தொடர்பில் நடந்தது என்ன? குறித்த இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்கள், இது ஒரு அரசியல் பழிவாங்கல். பிரதியமைச்சர் அமீர் அலி தான் என்னை இடமாற்றியுள்ளார் என்று கூறுகின்றார். இதன் பின்னணி என்ன? இது தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.என்.எம்.எம். நைறூஸ் அவர்களிடம் வினாவிய போது, ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்: 01. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.என்.எம்.எம். நைறூஸ் அவர்களே! இளைஞர் சேவை அதிகாரி ஹனீபாவின் திடீர் இடமாற்றம் தொடர்பில் அரசியல் தலையீடு உள்ளதாக மக்களினால் பேசப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?
உதவிப்பணிப்பாளர் எம்.என்.எம்.எம். நைறூஸ்:
“ஆம் இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஹனீபா அவர்களின் இடம் மாற்றம் தொடர்பில் எந்தவொரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்கும் நான் இடமளிக்கவில்லை. அவ்வாறு இடமளிக்கவும் மாட்டேன். ஏனென்றால், அரசாங்க அதிகாரிகள் தமது கடமைகளைச் சுதந்திரமாகவும், பயபக்தியுடனும் செய்யும் சுமூகமான சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு அரசாங்க அதிகாரி தனது கடமையினைச் சரியாகச் செய்யும் போது, அரசியல்வாதிகளினால் அவருக்கு தீங்கு இழைக்கப்படுமென்று அவர் அச்சமடையத்தேவையில்லை. அந்த நிலை இந்த அரசாங்கத்தில் இல்லை. அது மலையேறி விட்டது. உண்மைக்கும் நேர்மைக்கும் தற்போது இடமுண்டு. இது விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவது அரசாங்க ஊழியர்களுடைய கடமையும் பொறுப்புமாகுமெனக் குறிப்பிட்டார். மேலும், மக்கள் ஊழியரான நான் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு கீழும் பணியாற்ற வேண்டிய அவசியமில்லை.
என்னுடைய கடமைக்கான நிகழ்ச்சி நிரல் என்ன என்பதனை நான் நன்கறிவேன்.அதன் சட்ட திட்டங்களுக்கமைவாகவே நான் செயற்படுகின்றேன்.
ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்: அவ்வாறென்றால், இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் திடீர் இடமாற்றம் தொடர்பில் உமது கருத்து என்ன? அவர் ஏன் இடமாற்றம் செய்யப்பட வேண்டும்? அது தொடர்பாகக் கூற முடியுமா?
உதவிப்பணிப்பாளர் எம்.என்.எம்.எம். நைறூஸ்: –
“ நிச்சயமாகக் கூற முடியும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளுள்ளன. இதற்கமைவாக 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிராம மட்ட இளைஞர் கழகங்கள், பிரதேச மட்ட இளைஞர் கழகங்கள் நிறுவப்பட்டு, மாவட்ட மட்டத்தில் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் அமைக்கப்படும். கடந்த மாதம் 2015.04.11ஆம் திகதி சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் அமைப்பதற்காக வேண்டி 14 பிரதேச சம்மேளனத்துக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு வழங்கப்பட்ட போதிலும், ஏனைய 13 பிரதேச சம்மேளனங்களும் அங்கு பங்கு பற்றியிருந்தது. ஆனால், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சம்மேளனம் கலந்து கொள்ளவில்லை.
அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான இளைஞர் சேவை அதிகாரியான ஹனீபா அவர்களும் அன்றைய தினம் கலந்து கொள்ளவில்லை” மாவட்ட மட்டத்தில் நிறுவப்படும் ஒரு அமைப்பில் ஒரு பிரதேச செயலாளர் பிரிவு புறக்கணிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை. இருப்பினும், அன்றைய தினம் சம்மேளன நிருவாகத்தெரிவில் கலந்து கொண்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப்பணிப்பாளர் கே.தவராஜா குறித்த பிரதேச சம்மேளன நிருவாக அங்கத்தவர்கள் கலந்து கொள்ளாமை தொடர்பில் உடனடியாக அறிக்கை செய்யுமாறு என்னைப் பணித்ததுடன், தற்காலியமாக சம்பந்தப்பட்ட இளைஞர் சேவை அதிகாரியை ஒழுக்காற்று விசாரணைக்காக மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றப் பணிமனைக்கு இடம்மாற்றம் செய்தார். இது தான் நடந்த உண்மை. இருப்பினும், உண்மைக்குப் புறம்பான செய்திகள் ஊடகங்களில் வலம் வருவதனையிட்டு நான் மன வேதனையடைகின்றேன் எனக்குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்: –
நன்றி உதவிப்பணிப்பாளர் அவர்களே.
இறுதிக்கேள்வி அன்றைய தினம் இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா கலந்து கொள்ளாமைக்கான காரணம் பற்றி உங்களுக்கு அவர் தெரிவித்தாரா?
உதவிப்பணிப்பாளர் எம்.என்.எம்.எம். நைறூஸ்: –
இல்லை. கூட்டம் நடை பெறுவதற்கு முன் தினம் வெள்ளிக்கிழமை அவர் என்னிடம் வந்து, தான் கொழும்புக்கு பயணமொன்று செல்லவுள்ளேன். குறித்த கூட்டத்திற்கு சமூகமளிக்காமல் விடவா? என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைமைகாரியாலயத்திலிருந்து அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளதாலும், இக்கூட்டத்தில் இளைஞர் சேவை அதிகாரிகள் கலந்து கொள்வதன் அவசியம் பற்றியும், அக்கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவருக்கு நான் வலியுறுத்தினேன். ஆனால், அவர் அதனைப் பொறுட்டுத்தாமல் நடந்து கொண்டுள்ளார். நன்றி உதவிப்பணிப்பாளர் அவர்களே!
இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றம் குறித்து கிழக்கு மாகாணப்பணிப்பாளர் கே.தவராஜா அவர்களை தொலைபேசியில் அழைப்பினை ஏற்படுத்திய போது, நாம் இக்கேள்வியினைக் கேட்டோம்.
ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ்:- இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றத்தில் அரசியல் தலையீடு உள்ளதாக கல்குடாப் பிரதேசத்தில் பேசப்பட்டு வருகின்றது. சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி இணையத்தளங்களிலும் இது ஒரு அநியாயமான செயற்பாடு. இவ்விடமாற்றம் பிரதேச அரசியல்வாதியின் பணிப்புரைக்கமைவாக மேற்கொள்ளப்பட்டதென்ற செய்திகள் மக்கள் மன்றத்திக்கு உலா வருகின்றது. மீண்டும் கேட்கின்றேன். இது ஒரு அரசியல்வாதியின் குறிப்பாக பிரதியமைச்சர் அமீர் அலியின் பணிப்புரைக்கமைவாகவே இவ்விடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்கள் கூறுகின்றார்.
இது பற்றி உங்கள் கருத்து என்ன?
கிழக்கு மாகாணப்பணிப்பாளர் கே.தவராஜா: -“ எந்த ஒரு அரசியல் தலையிடுகளும் இளைஞர் சேவை அதிகாரி ஹனீபா அவர்களின் இடமாற்றத்தில் இல்லை. அவர் தமது கடமையைச் சரியாகச் செய்யவில்லை. தனது கடமையினை அவர் துஷ்பிரயோகம் செய்தமைக்காகவும், அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை மற்றும் மேல் அதிகாரிகளது பணிப்புரைகளை உதாசீனம் செய்தமை பேன்ற காரணத்திற்கானவே நான் அவரை இடமாற்றம் செய்தேன் என்றும், இதில் எந்தவொரு அரசியல்வாதிகளின் தலையீடுகளும் இல்லை என்றும் உறுதியாக சாட்சியமளித்தார்.
இது தொடர்பாக மேலும் அலசி ஆராய வேண்டிய தேவை எனக்கு ஏன் ஏற்பட்டது. சமூக வலைதளங்களிலும், செய்தித்தளங்களிலும் இளைஞர் சேவை அதிகாரி நியாயமற்ற முறையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதுவொரு அரசியல் பழிவாங்கல் என்றும், இதன் பின்னணியில் கல்குடாப் பிரதேசத்தின் அரசியல்வாதியும் தற்போது மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவராகவும் பிரதியமைச்சராகவுமுள்ள கௌரவ எம்.எஸ்.எஸ்.அமீர்அலியின் தெளிவான பழிவாங்கல் செயற்பாடு. இது கண்டிக்கதக்க விடயம் என்றும், குறித்த இளைஞர் சேவை அதிகாரி கல்குடா சூறா சபையின் முக்கிய செயற்பாட்டாளர் என்றும், கல்குடாவுக்கு தூய்மையான தண்னீர் கொண்டு வருவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டு, கௌரவ தேசியத்தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களினூடாக இத்திட்டம் நிறைவேற்றப்படுவதனை சகித்துக்கொள்ள முடியாத அரசியல்வாதி என்னை இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கியுள்ளார் என்று ஊடகங்களுக்குத் தானே மறைமுகமாக அறிக்கை வழங்கியுள்ளதுடன், தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனுதாபங்களைத் தோட முயற்சித்துமுள்ளார்.
வாசகர்கள் நினைக்கலாம். இது தொடர்பில் ஏன் இந்த ஊடகவியலாளர் இவ்வளவு பிரயத்தனங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று. “ நான் ஒரு இளைஞன். கடந்த 2014 வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் கழக சம்மேளனத்தின் உப தலைவராகச் செயற்பட்டவன். இதன் உண்மை நிலை என்ன? என்பது எனக்கு நன்கு தெரியும். பொய்யான பிரசாரங்கள் மக்கள் மத்தியில் பரப்பபட்டு வருவதனை அவதானித்த நான், ஏன் இதற்குள் தலை நீட்ட வேண்டுமென்று நினைத்தேன். இருப்பினும், உண்மையை தெரிந்து கொண்டு, ஒரு ஊடகவியலானாக இருந்தும் இதனை மக்களுக்கு நடந்தது என்ன? என்பது பற்றிக் கூறவில்லை என்றால், நாளை இறைவனின் நீதி மன்றத்தில் நான் தண்டிக்கப்படுவேன் என்ற அச்சதாலும், இவ்வாறு கடமையைத் துஷ்பிரயோகம் செய்யும் அதிகாரிகள் பலர் எம் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இனங்காட்டப்பட வேண்டுமென்பதற்காகவும். ஒரு இளைஞன் நேர்மையாகச் சிந்தித்தால் என்ன மாற்றம் வரும் என்பது எமது மக்களுக்குப் புரிய வேண்டுமென்ற நன்நோக்கத்திலேயே எனக்குத் தெரிந்த நடந்தது என்ன?
என்ற உண்மையை மக்களுக்குச் சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரியினால் எனக்கு தீங்கிழைக்கப்படலாம்
இறைவன் மீது நம்பிக்கை வைத்து, மறுமைக்காக வாழும் எந்த இளைஞனும் உண்மையைப் பொய்யுடன் கலக்கமாட்டான் என்பது உறுதியாகும். மேலும், கல்குடாத்தொகுதியில் நிறுவப்பட்டுள்ள மஜ்லிஸ் சூறா சபை மக்களின் வரவேற்பினைப் பெற்று, நல்ல பணிகளை கல்குடாப் பிரதேச மக்களுக்காக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது.
பிழையான கருத்துக்களை, நடக்காதவொன்றை கல்குடா சூறா சபையின் செயற்பாட்டாளர் என்று தன்னை அடையாளங்காட்டும் இளைஞர் சேவை அதிகாரியாக இருக்கும் காரணத்திற்காக அரசியல் பழிவாங்கல் என்று கூறுவது அறிவுடைமையாகாது. இதன் உண்மை நிலையை கல்குடா சூறா சபை அங்கத்தவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது மாத்திரமல்லாது, எமது சமூக நலனுக்காக முன் நின்று உழைக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமூக நிறுவனங்களுக்கும் என்றும் நான் எனது ஒத்துழைப்பை வழங்கத்தயார்.