Breaking
Thu. Jan 16th, 2025

-Kalaiyarasan

காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது.

இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடிக்கின்றன. இஸ்ரேலை நியாயப் படுத்தும் பெற்றோரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்க்கும் பிள்ளைகளும், அடிக்கடி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களிலும், இஸ்ரேல் குறித்த கருத்து முரண்பாடுகள், மாணவர்களுக்கு இடையில் பிரிவினையை உண்டாக்கி உள்ளது. சியோனிச யூத மாணவர்களும், பெந்தெகொஸ்தே சபைகளை சேர்ந்த கிறிஸ்தவ மாணவர்களும் ஓரணியில் நின்று இஸ்ரேலை ஆதரிக்கிறார்கள். மறு பக்கத்தில், மதச் சார்பற்ற யூத மாணவர்களும், இடதுசாரி மாணவர்களும் எதிர் அணியில் நின்று, இஸ்ரேலை எதிர்க்கிறார்கள்.

இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி அணியினரின் பலம் கூடிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய மாணவர்கள் அந்த அணியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். இடதுசாரிகளின் பக்க நியாயத்தை கூறும் தகவல்கள், அதிகளவில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருவதும் அதற்கு ஒரு காரணம். தமிழ் பேசும் இணைய சமூகத்திலும் அது போன்ற மாற்றங்களை உணர முடியும். ஒரு வருடத்திற்கு முன்பு வரையில் கூட, இஸ்ரேலின் சியோனிச கொள்கையை வெளிப்படையாக ஆதரித்து வந்த, வலதுசாரி தமிழ் தேசியவாதிகளில் ஒரு பிரிவினர், அந்த நிலைப்பாட்டை கைவிட்டுள்ளனர்.

பிரிட்டனில், பாலஸ்தீன நீதிக்கான யூதர்கள் (Jews For Justice For Palestinians) என்ற இடதுசாரிகளின் அமைப்பு, 2003 முதல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதிலே குறிப்பிடத் தக்க விடயம் என்னவெனில், ஓரிரு வருடங்களுக்கு முன்னர் கூட யாருக்கும் தெரியாமல் இருந்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்துள்ளது. லண்டனில் ஒவ்வொரு வாரமும் நடக்கும் காஸா போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இடதுசாரி யூதர்களின் பிரிவு ஒன்று தவறாமல் கலந்து கொள்கின்றது. அமெரிக்க நகரங்களிலும், பாரிஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற பிற ஐரோப்பிய நகரங்களிலும், இடதுசாரி யூதர்களின் அணி ஒன்று, ஊர்வலங்களை ஒழுங்கமைக்கும் குழுவில் கலந்து கொள்கின்றது.

லண்டனில், டவுனிங் தெருவில், பட்டப்பகலில் ஓர் இஸ்ரேலிய பிரஜை தனது கடவுச் சீட்டை எரித்து பரபரப்பூட்டினார். அந்த சம்பவத்திற்குப் பின்னர், லண்டனில் வாழும் யூதர்கள் பலர், வெளிப்படையாக இஸ்ரேலை விமர்சித்து பேசும் துணிவைப் பெற்றுள்ளனர். (இவ்வளவு காலமும் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்கள், யூத சமூகத்திற்குள் கடுமையாக அடக்கப் பட்டன.) மேலும், யூதர்களை வெறுக்காமல் இஸ்ரேலை விமர்சிப்பது எப்படி என்பதை விளக்கும் துண்டுப் பிரசுரம், ஒவ்வொரு ஆரப்பாட்டங்களின் போதும் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டு வருகின்றது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது ஒரு தமிழ்ப் பழமொழி. சிங்களவர்களும், தமிழர்களும் பிரிந்து நின்றால் இலங்கை அரசுக்கு கொண்டாட்டம். அதனால், எத்தகைய இடதுசாரி அமைப்பிற்குப் பின்னாலும் மக்கள் சென்று விடாதவாறு, அரசு தனது கைக்கூலிகளைக் கொண்டு எதிர்ப் பிரச்சாரங்களை முடுக்கி விடும். அதே சூழ்ச்சியை, மேற்கத்திய நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

மேற்கத்திய நாடுகளில் வாழும், “ISIS ஆதரவு முஸ்லிம்கள்”, பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் புகுந்து, யூதர்களுக்கு எதிரான கோஷம் எழுப்புவார்கள். அத்தகைய தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊடகங்கள், “எமது நாட்டில் யூத வெறுப்பு அதிகரித்து வருவதால், யூத மக்கள் பயந்து போயிருக்கிறார்கள்” என்று வதந்திகளை பரப்பி விடுவார்கள். அந்த நாடுகளில் உள்ள வலதுசாரி சியோனிச அமைப்புகளும் தரவுகளை தொகுத்து அறிக்கையாக சமர்ப்பிக்கும். இவை எல்லாம், மேற்கத்திய உளவு நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றன என்பது இரகசியம் அல்ல. உலகில் உள்ள எல்லா சமூகங்களிலும், குறிப்பிட்ட அளவு இனவாதிகள் இருப்பார்கள். ஆனால், அவர்களை வளர விடாமல் தடுப்பது நாகரிகமடைந்த மக்களின் கடமை ஆகும்.

இஸ்ரேலிலும், இடதுசாரி யூதர்கள், காஸா போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இஸ்ரேலில் அரச அடக்குமுறை மிகவும் கடுமையாக உள்ளது. இஸ்ரேலிய இடதுசாரி கட்சியொன்றை சேர்ந்த, பாலஸ்தீன பூர்வீகத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், கினேசெட் எனும் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது, “ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம்” என்று குறிப்பிடவில்லையாம். அந்தக் குற்றத்திற்காக, அவருக்கு ஆறு மாத காலத்திற்கு பாராளுமன்ற பேச்சுரிமை மறுக்கப் பட்டுள்ளது. ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கே இந்தளவு அடக்குமுறை என்றால், பிற சமூக ஆர்வலர்களின் நிலைமை பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

இஸ்ரேலை வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக கணித்தால், அங்கே தான் வறுமை அதிகமாக உள்ளது. 2011 டெல் அவிவ் நகரில், அரசுக்கு எதிராக Occupy பாணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. போர் நடக்கும் காலத்தில் வழமையாகவே தேசியவெறி அதிகரிக்கும். ஹமாசின் ஏவுகணைகளை காட்டி, இஸ்ரேலின் பாதுகாப்பு முக்கியம் என்று செய்யப் படும் பிரச்சாரங்கள், அப்பாவி மக்களை இலகுவில் கவரக் கூடியவை. “மதம் மக்களின் அபின்” என்றார் கார்ல் மார்க்ஸ். (அவரும் ஒரு யூதர் தான்.) மதம் மட்டுமல்ல, தேசிய வெறியும் மக்களின் அபின் தான் என்று, நூறு வருடங்களுக்கு முன்னரே, தன்னை ஒரு சியோனிச எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டார், மாமேதை ஐன்ஸ்டைன். (அவரும் ஒரு யூதர் தான்.)

(இந்தக் கட்டுரை சில பத்திரிகை செய்திகளை தழுவி எழுதப் பட்டது.)

தகவல்களுக்கு நன்றி :
NRC Handelsblad (நெதர்லாந்து)
Haaretz (இஸ்ரேல்)

Related Post