நாட்டுக்காகவும், பௌத்த மதத்துக்காகவும் குரல்கொடுத்த ஞானசார தேரரின் கடந்த காலத்தை ஆராய்ந்து கொண்டிருக்காது உலமா சபையின் ஐ.எஸ். அமைப்புடனான தொடர்புகளைத் தேடிப்பார்க்குமாறு உளவுப்பிரிவினருக்கு பொதுபலசேனா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐ.எஸ்.அமைப்பில் இணைந்து செயற்பட்டு சிரியாவில் கொல்லப்பட்ட அபூ சிலானி என்பவருக்கும் இலங்கை ஐம்இய்யத்துல் உலமாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. இதனால் உலமா சபைக்கும் ஐ.எஸ் அமைப்புக்கும் தொடர்புள்ளதாக சந்தேகிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கிருலப்பனையிலுள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுபலசேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டிலந்த விதானகே மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை விடுத்தார்.அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்
ஐ.நா.சபையின் செயலாளர் நாயகம் அண்மையில் ஐ.எஸ் அமைப்பு தொடர்பாக 20 பக்க அறிக்கையொன்றினை பாதுகாப்புச் சபைக்கு கையளித்துள்ளார். அதில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ளார். சூரா கவுன்ஸில் பற்றியும் அவர் குறிப்பிப்பிட்டுள்ளார். அதனால் எமது நாட்டிலுள்ள சூரா கவுன்ஸில் மீதும் நாம் பயப்பட வேண்டியுள்ளது.
பான்கிமூனின் அறிக்கை
ஐ.நாடுகள் சபை செயலாளர் நாயகம் பன்கீமூன் பாதுகாப்புச் சபைக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இஸ்லாமிய ஆட்சி தெற்காசியாவில் வியாபிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் இது பரவி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த தெற்காசிய வலயத்தினுள்ளே இலங்கையும் அடங்குகிறது.
தெற்காசிய நாடுகள் தமது எல்லைகளை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ள வேண்டுமெனவும் இந்த நாடுகளின் எல்லைகள் ஊடாகவே ஐ.எஸ் அமைப்பில் இணைந்து கொள்வதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் பயணிக்கின்றார்கள் எனவும் பான்கீமூன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் மையமாக இலங்கை இருக்கிறது. இதனை நாம் 2 வருடங்களுக்கு முன்பே அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தோம். நாம் அன்று கூறியதை இன்று பான்கிமூன் கூறுகிறார். அதனால் இப்போதாவது எமது நிலத்தை இஸ்லாமிய தீவிரவாதத்திடமிருந்து காப்பாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வதேச முஸ்லிம் பெண் பாடசாலைகளில் தீவிரவாதம்
நாட்டிலுள்ள சர்வதேச முஸ்லிம் பெண் பாடசாலைகளில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகிறது. இவ்வாறான கல்லூரிகளில் கடந்த 7 வருடங்களாக அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு வருகிறது. மாணவிகள் அணியும் நிக்காப், புர்க்கா என்பன தீவிரவாதத்திற்கு அத்தாட்சியாக அமைந்துள்ளன.
கொழும்பில் முஸ்லிம் பெண்கள் கல்லூரிகளில் தீவிரவாதம் போதிக்கப்படுகிறது என்பதை நாம் ஏற்கனவே அரசுக்கு எச்சரித்திருந்தோம்.
ஆனால் அரசு கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் இப்போது பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரி ஒருவரே இதனை உறுதி செய்துள்ளார்.
மத்ரஸாக்களில் அடிப்படை வாதம்
நாட்டிலுள்ள மத்ரஸாக்களிலும் அடிப்படைவாதம் போதிக்கப்பட்டு வருகிறது. இதனையும் நாம் ஏற்கனவே அரசாங்கத்துக்கு எச்சரித்திருந்தோம். ஆனால் அரசு கவனத்தில் கொள்ளவில்லை.