துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வௌியிட்டுள்ளார்.
அத்துடன், உலகலாவிய தீவிரவாதத்திற்கு எதிராக ஒன்றுமையுடன் நிறுபோம் எனவும் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்றிரவு சுமார் 10.00 மணியளவில் டாக்சியில் வந்த மூன்றுபேர் பயணிகள் வருகை பகுதி கூடத்துக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவர் இயந்திர துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதனால் பீதியடைந்த மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்று நுழைவு வாயிலை நோக்கி, தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது அவர் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பலர் கொத்துகொத்தாக உடல் சிதறி தரையில் விழுந்தனர்.
இந்த தாக்குதலில் இருந்து தப்பி உயிர்பிழைத்த பலர் நுழைவு வாயில் கதவை நோக்கி ஓடிய வேளையில், அங்கு நின்றிருந்த மற்றொருவர், தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் பலர் பிணங்களாக சாய்ந்தனர் என, வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இதேபோல், வாகனங்கள் நிறுத்தும் பகுதியிலும் இன்னொருவர் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இந்த கொடூர தாக்குதல்களில் 36 பேர் பலியானதாகவும், 150-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் துருக்கி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. குறிப்பாக, இந்த தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை வெகுவாக உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் மற்றும் உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் நடந்திருக்கும் விதத்தை வைத்துப் பார்க்கும்போது, இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் கைவரிசைதான் என கருத வேண்டியுள்ளதாக துருக்கி பிரதமர் பினாலி இல்டிரிம் தெரிவித்துள்ளார் என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மேலும், தாக்குதலுக்குள்ளான விமான நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. சுற்றுப்புற சாலைகள் அனைத்திலும் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நகரின் மற்ற பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் இஸ்தான்புல் நகரம் முழுவதும் பொலிசாருடன் இராணுவத்தினரும் வாகனங்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.