இஸ்ரேலில் வரும் மார்ச் 17-ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.இஸ்ரேலில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கிடையே மோதல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்தலாம் என்ற செய்தி வெளியானது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைச்சரவைக் கூட்டத்திலும் தனது அதிருப்தியை பிரதமர் வெளிப்படுத்தினார். இதுதவிர இரண்டு அமைச்சர்கள், பிரதமரின் கொள்கைகளை வெளிப்படையாக விமர்சித்து வந்தனர். ஆட்சியில் இருந்துகொண்டே இவ்வாறு விமர்சிப்பதால் பிரதமர் கடும் அதிருப்தி அடைந்தார்.
இந்நிலையில், தேர்தல் நடத்துவது தொடர்பாக இன்று அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள், தேர்தலை முன்கூட்டியே நடத்த ஒப்புக்கொண்டதையடுத்து, மார்ச் 17-ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனை சபாநாயகர் நெஸ்சட் அறிவித்தார்.
இக்கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் நேதன்யாகு, இஸ்ரேல் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய சவால்களுக்கு மத்தியில் அரசாங்கத்தைவழிநடத்தப் போவது யார்? என்ற கேள்விக்கு விடை அளிக்கும் வகையில் இந்த தேர்தல் அமையும் என்று குறிப்பிட்டார்.“சில வாரங்களாக எனது தலைமையின் கீழ் உள்ள அரசாங்கத்தை மந்திரிகளான லாபித் மற்றும் லிவ்னி ஆகியோர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இருந்துகொண்டே அரசாங்கத்தின் கொள்கைகளையும், அதன் தலைவரையும் தாக்குவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்றும் நேதன்யாகு கூறினார்.